உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மலர் கண்காட்சிக்கு சென்ட் போட்டு செல்ல வேண்டாம்

மலர் கண்காட்சிக்கு சென்ட் போட்டு செல்ல வேண்டாம்

பெங்களூரு: 'லால்பாக் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காண வரும் பொது மக்கள், அதிக வீரியம் கொண்ட வாசனை திரவியம் போட்டு வரக்கூடாது' என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியது.இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:குடியரசு தினத்தை முன்னிட்டு, பெங்களூரின் லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு வரும் பொது மக்கள், அடர்த்தியான வாசம் கொண்ட வாசனை திரவியம் போட்டு வர கூடாது.பூங்காவில் உள்ள மரங்களில், ஆங்காங்கே தேனீக்கள் கூடு கட்டியுள்ளன. வாசனை திரவியத்தின் வாசம் தேனீக்களை ஈர்க்கும் அபாயம் உள்ளது. உங்களை தேனிக்கள் தாக்க கூடும். எனவே அடர்த்தியான வாசம் கொண்ட திரவியத்தை உடலில் பூசி வராதீர்கள்.ஒருவேளை தகவல் தெரியாமல், வாசனை திரவியம் போட்டு வந்திருந்தால், பூங்காவில் மரங்களின் அருகில் செல்லாதீர்கள். தோட்டக்கலைத் துறை ஊழியர்கள், லால்பாக் பூங்காவில் உள்ள சில தேன் கூடுகளை அகற்றினர். ஆனால் உயரமான மரங்களின் மீதுள்ள தேன் கூடுகளை அகற்ற முடியாமல், அப்படியே விடப்பட்டுள்ளன.மலர் கண்காட்சிக்கு வருவோர், மரங்களின் கீழே நின்று சிகரெட், பீடி புகைக்க கூடாது. தேன் கூடுகள் மீது மொபைல் போன் லைட்டுகளை போட்டு பார்க்க கூடாது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில், தேவையான ஊசி, மருந்துகளுடன் பூங்காவில் ஆங்காங்கே டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் குழுவினர் இருப்பர்.மலர் கண்காட்சியை காண பெரியவர்களுக்கு வார நாட்களில் 80 ரூபாய், வார இறுதியில் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு அனைத்து நாட்களிலும் 30 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கு கீழுள்ள மாணவ, மாணவியர் சீருடையுடன் வந்தால், அனுமதி இலவசம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ