மருத்துவத்தை சேவையாக செய்யும் டாக்டர்
மருத்துவத்தை வியாபாரமாக பார்க்கும் இந்த காலத்தில், ஒரு டாக்டர், ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கிறார். அது மட்டுமின்றி, இலவச பள்ளியும் நடத்துகிறார். உதாரணம்
கல்வி மற்றும் மருத்துவத்தை தொழிலாக பார்க்கக் கூடாது. சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும். ஆனால் இந்த காலத்தில் தலைகீழாக நடக்கிறது. பணம் சம்பாதிக்கும் ஒரே நோக்கத்தில், சிலர் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் நடத்துகின்றனர். இது போன்றவர்கள் கல்விக் கட்டணம், சிகிச்சை கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றனர்.கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதால், மாணவர்களை வகுப்பறையை வெளியேற்றும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. அதுபோன்று பணம் கொடுத்தால் மட்டுமே, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்கிறது. இல்லையென்றால் தயவு, தாட்சண்யமின்றி விரட்டிய உதாரணங்கள் உள்ளன.தனியார் மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளிலும் கூட பணம் எதிர்பார்க்கின்றனர். இச்சூழ்நிலையில், பெலகாவியில் ஒரு டாக்டர் பிரதிபலன் எதிர்பார்க்காமல், ஏழைகளுக்கு சேவை செய்து, நடமாடும் கடவுளாக வாழ்கிறார். பெலகாவி, அதானியின் அவரகோடா கிராமத்தில் வசிப்பவர் டாக்டர் சிவபசவ நாயக், 40. இவர் நோயாளிகளுக்கு ஆபத்பாந்தவனாக திகழ்கிறார். முன்மாதிரி
தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணம் கேட்பதில்லை. ஒருவேளை அவர்கள் பணம் கொடுத்தாலும், 40 - 50 ரூபாய் மட்டுமே பெற்று, தரமான சிகிச்சை அளிக்கிறார். மருந்துகள் கொடுக்கிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், பல கஷ்டங்களை கடந்து, படித்து டாக்டரானார்.எனவே இவர் தன்னை போன்ற ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்து, தொழில் தர்மத்தை கடைபிடிக்கிறார். மற்ற டாக்டர்களுக்கு முன்மாதிரியாக வாழ்கிறார்.டாக்டர் சிவபசவ நாயக், நான்கு ஏக்கர் விவசாய நிலம் வாங்கியுள்ளார். இதை தன் அண்ணனுக்கு கொடுத்துள்ளார். அவரும் விவசாயம் செய்து வருகிறார். மருத்துவ சேவையுடன், கல்விச்சேவையும் செய்கிறார். ஒரு பள்ளியை திறந்துள்ளார். இங்கு 28 ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்கிறார்.வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன் சொந்த செலவில், தங்குவதற்கு இடம், உணவு ஏற்பாடு செய்தார். அவர்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்தார். தேவையானவர்களுக்கு சிகிச்சை அளித்தார். இவரது சேவையை பலரும் பாராட்டுகின்றனர் - நமது நிருபர் -.