பெங்களூரு: எந்த பொருளாக இருந்தாலும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக வினியோகம் செய்யும் சேவை, கர்நாடக மாநிலம் பெங்களூரில் துவங்கியுள்ளது.நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாகக் கருதப்படும் பெங்களூரில் உள்ளவர்களுக்கு மிகப் பெரிய பிரச்னை, போக்குவரத்து நெரிசல். 'ஸ்கை ஏர்'
ஆனால், இந்த பிரச்னை இல்லாமல், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை வேகமாகக் கொண்டு சென்று வினியோகிக்கும் சேவையை துவக்கியுள்ளது, டில்லியைச் சேர்ந்த 'ஸ்கை ஏர்' என்ற தனியார் ட்ரோன் நிறுவனம்.பெங்களூரில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள், மருந்துகள் மற்றும் பரிசோதனைக்கான மாதிரிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் சென்று வினியோகிக்க, ட்ரோன் சேவையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தின. ஆனால், இதில் பெரிய அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.இந்நிலையில், ஸ்கை ஏர் நிறுவனம், வான்வழி கூரியர் சேவையை துவக்கியுள்ளது. தற்போதைக்கு கோனன்குந்தே, கனகபுரா பகுதிகளில் இந்த சேவை துவங்கியுள்ளது. நகரின் மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.சாலை மார்க்கமாக சென்றால் சில மணி நேரம் தேவைப்படும் இடத்தில், சில நிமிடங்களிலேயே பொருட்களை இந்த நிறுவனம் கொண்டு சேர்க்கிறது.இந்த நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான அங்கித் குமார் கூறியதாவது:தற்போதைய நிலையில், 10 கிலோ வரை எடையுள்ள பொருட்களை வினியோகிக்கிறோம். சேவைகள் விரிவடையும்போது, அதிக எடையுள்ள பொருட்களையும் கையாளுவோம். இணையதளம்
எங்களுடைய இணையதளத்தில் அல்லது மொபைல் போன் செயலியில் பதிவு செய்து, இந்த சேவைகளை பெறலாம். சில தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்கி வருகிறோம்.காற்று மாசை ஏற்படுத்தாது என்பதால், எதிர்காலத்தில் ட்ரோன் டெலிவரி முறை மேலும் பிரபலமடையும்.இவ்வாறு அவர் கூறினார்.