டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.20 கோடியை இழந்த மூதாட்டி
மும்பை,: மஹாராஷ்டிராவில் 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் தொழிலதிபர் ஒருவரின் மனைவியை மூன்று மாதங்களாக அச்சுறுத்தி, 20 கோடி ரூபாயை ஆன்லைன் வாயிலாக பறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவி, 86. இவர் மட்டும் வீட்டில் தனியாக வசிக்கிறார். உதவிக்கு பணியாளர்கள் உள்ளனர். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவர் வெளியூரில் வசிக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இவரின் மொபைல் எண்ணுக்கு ஒருவர் சி.பி.ஐ., அதிகாரி என்ற பேரில் அழைத்து, வீடியோ கால் இணைப்பில் இணையும்படி கூறியுள்ளார். அதன் பின் அவரிடம், 'உங்கள் ஆதார் எண்ணை வைத்து துவங்கப்பட்ட வங்கி கணக்கில் பண மோசடி நடந்துள்ளது. அது தொடர்பாக விசாரிக்கிறோம். அறையை விட்டு வெளியே செல்லக்கூடாது. சென்றால் உங்களையும், உங்கள் மகளையும் டிஜிட்டல் கைதுக்கு உட்படுத்துவோம்' என, மிரட்டியுள்ளார்.இதனால் பயந்து போன அவர், தன் அறையை விட்டு வெளியேறாமல் இருந்தார். அவரிடம் வங்கிக் கணக்குகள் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக இருப்பதால், அது பற்றி ஆராய வங்கி கணக்கு விபரங்களை வழங்கும்படி கேட்டுஉள்ளனர். முதிய பெண்மணியும் அதை நம்பி விபரங்களை வழங்கியுள்ளார். அதிலிருந்து தினமும் குறிப்பிட்ட தொகை என மார்ச் 3ம் தேதி வரை 20 கோடி ரூபாயை பறித்துள்ளனர்.இந்நிலையில், மூதாட்டியில் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்தார். உணவு எடுத்துச் செல்ல மட்டுமே வெளியே வருவதையும், நாள் முழுக்க அறையில் இருப்பதையும் பார்த்து மூதாட்டியின் மகளுக்கு தகவல் அளித்தார். மகள் விசாரித்த போது நடந்த தகவல்களை மூதாட்டி கூறினார். தன் தாய் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மகள், உடனடியாக மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அவர்களின் விசாரணையில், பணம் பல வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. அந்தக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதன் வாயிலாக இதுவரை, 77 லட்சம் ரூபாயை மீட்டனர்.இந்த மோசடி தொடர்பாக மும்பையைச் சேர்ந்த ஷயான் ஜமில் ஷேக், 20, ரஸிக் அஜான் பட், 20, ஹிருத்திக் ஷேகர் தாக்கூர், 25, ஆகிய மூவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இந்த மோசடியில் வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.