உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பத்திர வழக்கு நிர்மலாவிடம் விசாரிக்க தடை

தேர்தல் பத்திர வழக்கு நிர்மலாவிடம் விசாரிக்க தடை

பெங்களூரு,பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டி 8,000 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்க வைத்ததாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது பதிவான வழக்கு விசாரணைக்கு, வரும் 22ம் தேதி வரை தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புகார்

'அமலாக்கத் துறை வாயிலாக சோதனை நடத்துவோம்' என, பன்னாட்டு நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர், தலைமை செயல் அதிகாரிகளை மிரட்டி பா.ஜ.,வுக்கு தேர்தல் பத்திரம் வாயிலாக, 8,000 கோடி ரூபாய் நன்கொடை வசூலித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை அதிகாரிகள், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, கர்நாடக முன்னாள் பா.ஜ., தலைவர் நளின் குமார் கட்டில், தற்போதைய பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆகியோர் மீது, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவின் படி, கடந்த 28ம் தேதி, பெங்களூரு திலக் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.தங்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நளின் குமார் கட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி நாக பிரசன்னா நேற்று விசாரித்தார்.

விசாரணை

போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷன் வாதாடுகையில், “அமலாக்கத் துறையை வைத்து சோதனை நடத்துவோம் என மிரட்டி 8,000 கோடி ரூபாய்க்கு மேல், பா.ஜ.,வுக்கு தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை வசூலித்துள்ளனர். இது மிகப்பெரிய முறைகேடு. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என்றார்.தங்கள் தரப்பு வாதங்களை, மனுதாரர் தரப்பு வக்கீல் ராகவன் முன்வைத்தார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாக பிரசன்னா கூறுகையில், “தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தவர்கள், தங்களை மிரட்டி பணம் வாங்கினர் என்று புகார் அளிக்கவில்லை. அவர்கள் புகார் அளித்தால் விசாரணை நடத்தலாம். வழக்கிற்கு சம்பந்தப்படாத ஒருவர் புகார் அளித்து இருக்கிறார்,” என்றார். மனு மீதான விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரிடம் விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுஉள்ளது. இதற்கு புகார்தாரர் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை