டில்லி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. பிரசாரத்தின் போது விதிமுறைகளை மீறியதாக, முதல்வர் ஆதிஷி மீது கீழ்படியாமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் ஆம் ஆத்மி - பா.ஜ., - காங்., இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன்தினம் மாலை ஓய்வடைந்த நிலையில், கல்காஜி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஆதிஷி, தொகுதிக்குட்பட்ட கோவிந்த்புரி பகுதியில், 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வாகனங்களில் வந்ததாகக் கூறப்படுகிறது.அப்போது அங்கிருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கூட்டத்தை கலைக்கும்படி கூறியதாகவும், இதை ஏற்க மறுத்து, முதல்வர் ஆதிஷி வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.இதை மொபைல் போனில் வீடியோ எடுத்த போலீஸ்காரரை, ஆதிஷியின் ஆதரவாளர் கன்னத்தில் அறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.இந்நிலையில், முதல்வர் ஆதிஷி மீது கீழ்படியாமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக டில்லி போலீசார் நேற்று தெரிவித்தனர். இது தொடர்பாக, முதல்வர் ஆதிஷி கூறியதாவது:கல்காஜி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் ரமேஷ் பிதுாரியின் குடும்பத்தினர், வெளிப்படையாக தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றனர். அவர்கள் மீது தேர்தல் கமிஷனிலும், டில்லி போலீசிலும் புகார் அளித்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் கமிஷன் விளக்கம்
விதிமுறைகளை மீறிய பா.ஜ.,வினர் மீது தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும், அவரது கட்டுப்பாட்டில் தேர்தல் கமிஷன் இயங்குவதாகவும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார்.இதற்கு பதிலளித்து, தேர்தல் கமிஷன் நேற்று அளித்த விளக்கம்:டில்லி சட்டசபை தேர்தலில், தேர்தல் கமிஷன் மீது வேண்டுமென்றே அவதுாறு பரப்பப்படுகிறது. இதை கமிஷன் கவனித்து வருகிறது. தேர்தல் கமிஷன் தனிநபர் அமைப்பு அல்ல; மூன்று பேரை கொண்ட அமைப்பு.அரசியலமைப்பு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளோம். மறைமுகமான குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிய மாட்டோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. - நமது சிறப்பு நிருபர் -