உள்நாட்டு தயாரிப்பு பொருட்களையே அனைவரும் வாங்க வேண்டும்: ரேகா குப்தா
புதுடில்லி:''உள்நாட்டில், கலைஞர்களால் தயாரிக்கப்படும் பொருட்களையே அனைவரும் வாங்க வேண்டும்,'' என, டில்லி முதல்வர் ரேகா குப்தா கூறினார். டில்லியில் கர்தவ்யா பாத் எனப்படும், கர்தவ்யா வழித்தடத்தில் நேற்று, சுதேசி மேளா என்ற பெயரில், உள்நாட்டு கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கான கண்காட்சி மற்றும் விற்பனையை துவக்கிய முதல்வர் ரேகா குப்தா, அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: நாடு முழுதும், ஒரே மாவட்டம், ஒரே பொருள் என்பது குறித்து, தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் நான், டில்லி மாநில தொழில்துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சாவை கேட்டுக் கொள்வதெல்லாம், டில்லியில் உள்நாட்டு கலைஞர்கள் தயாரிக்கும் பொருட்கள் என்ன இருக்கின்றன என்பதை ஆராய வேண்டும் என்பதாகும். போராட்டம் அதாவது, டில்லியின் புகழ்பெற்ற 'சாட் பகோடா' தவிர்த்து, டில்லியில் என்னென்ன உள்நாட்டு கலைஞர்கள் உள்ளனர். அவர்கள், தயாரிக்கும் பொருட்கள் என்ன என்பது குறித்து, ஆராய வேண்டும். ஏனெனில், சுதேசி பொருட்களை வைத்து, டில்லியில் ஒரு பெரிய போராட்டமே முன்னர் நடந்துள்ளது. சுதேசி முறையில் தயாரித்த பொருட்களை முன்வைத்து, சுதந்திர போராட்டத்தின் போது, மிகப் பெரிய ஆயுதமாக நடந்தது. சுதேசி முறையில் தான், நாட்டில் தன்னிறைவு அடைய முடியும். அதனால் தான், இந்த நாடு சுதந்திரம் அடைந்தது. எனவே, அனைவரும் உள்நாட்டு பொருட்களையே விரும்பி நுகர வேண்டும். ஏனெனில், இந்திய கைவினைப் பொருட்களுக்கு உலக அளவில் எளிதான விற்பனை வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, முதல்வர் ரேகா குப்தா பேசினார். பின், இந்திய மொபைல் போன் காங்கிரஸ் சார்பில் யசோபூமியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற அவர் பேசியதாவது: பிரதமர் மோடி, உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 'வோகல் பார் லோக்கல்' என்ற தாரக மந்திரத்தை முன் மொழிந்துள்ளார். உள்நாட்டு தயாரிப்புகள் என்றால், சாதாரண கைத்தொழில்கள் என்றில்லாமல், ராணுவம், தொழில்நுட்பம், சுகாதார ஆரோக்கியம், கல்வி போன்ற துறைகளிலும் உள்நாட்டு தயாரிப்பை மேம்படுத்த வேண்டும். ஏற்றுமதி மேலும், பிரதமர் மோடியின் கூற்று படி, இந்தியர்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் திறன் மட்டும் நம் நாட்டினருக்கு இல்லை; வெளிநாட்டினருக்கு தேவையான பொருட்களையும் தயாரித்து, ஏற்றுமதி செய்ய வேண்டும் என்கிறார். அந்த வகையில், உலக அளவில், பிரபலமான தயாரிப்புகளை இந்தியாவில் தயாரிக்க வேண்டும். அதற்கு, இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஊக்கமாக அமையும். இவ்வாறு ரேகா குப்தா பேசினார்.