உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கண்ணீர் புகை குண்டு வீச்சால் விவசாயிகள் நடைபயணம் ரத்து

கண்ணீர் புகை குண்டு வீச்சால் விவசாயிகள் நடைபயணம் ரத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஷம்பு: பஞ்சாப் - ஹரியானா எல்லையான ஷம்புவில் இருந்து, டில்லிக்கு நடைபயணமாக செல்ல முயன்ற விவசாயிகள் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து நடைபயணத்தை விவசாயிகள் கைவிட்டனர்.வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம்; விவசாய கடன் தள்ளுபடி; விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 13 முதல், 'டில்லி சலோ' போராட்டத்தை, ஹரியானா - பஞ்சாப் எல்லைகளான ஷம்பு, கானவுரி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தால், டில்லியின் எல்லைகளில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 6 மற்றும் 8ம் தேதிகளில், ஷம்பு எல்லையில் இருந்து டில்லிக்கு செல்ல முயன்ற விவசாயிகள் மீது, கண்ணீர் புகை குண்டு களை வீசி போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும், போராட்டத்தை கைவிடாமல், விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது முயற்சியாக நேற்று, ஷம்பு எல்லையில் இருந்து டில்லியை நோக்கி நடைபயணமாக செல்ல விவசாயிகள் முயன்றனர். தடுப்புகளை உடைத்து முன்னேறிய விவசாயிகளை, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், ஹரியானா போலீசார் சிறிது துாரத்திலேயே தடுத்து நிறுத்தினர். இதில், 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்தனர். இதனால், ஷம்பு எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.இதுகுறித்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் நேற்று கூறுகையில், “அமைதியாக நடைபயணம் சென்ற எங்கள் மீது ஹரியானா போலீசார் அடக்குமுறையை கையாண்டனர். ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி தாக்கினர்.“ஏராளமான கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தாக்கியதில், 18 விவசாயிகள் காயமடைந்தனர். இதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.''மேலும், இந்த முறை ரசாயனம் கலந்த நீரை எங்கள் மீது போலீசார் பீய்ச்சி அடித்தனர். சூழ்நிலையை கருதி நடைபயணத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவசாய சங்கங்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

J.V. Iyer
டிச 15, 2024 05:25

விவசாயிகள் என்ற போர்வையில் செயல்படும் இவர்கள் எல்லோரும் தேசத்துரோகிகள், பயங்கரவாதிகள் என்று தெரிந்தும் ஏன் இந்த தயக்கம்? இவைகளை முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது. தயக்கம் காட்டக்கூடாது ...


புதிய வீடியோ