உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  9 மாணவர்களை கம்பியால் தாக்கிய சக மாணவர்; ஒருவர் பலி

 9 மாணவர்களை கம்பியால் தாக்கிய சக மாணவர்; ஒருவர் பலி

பல்லாரி: கர்நாடகாவின் பல்லாரியில், தனியார் பள்ளி விடுதியில், சக மாணவர்கள் ஒன்பது பேர் மற்றும் வார்டனை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய மாணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஒரு மாணவர் உயிரிழந்தார். கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பல்லாரி டவுனில், 'குருகுலா' என்ற பெயரில், தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், ஆந்திராவைச் சேர்ந்த மாணவ - மாணவியரும் படிக்கின்றனர். இவர்களுக்கு பள்ளி வளாகத்தில் விடுதியும் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், கையில் கனமான இரும்புக் கம்பியை எடுத்து வந்து, ஹாஸ்டல் அறையில் துாங்கிக்கொண்டு இருந்த ஒரு மாணவி, எட்டு மாணவர்கள் மற்றும் ஹாஸ்டல் வார்டனை கண் மூடித்தனமாக சரமாரியாக தாக்கினார். பின், அங்கிருந்து தப்பியோடினார். இரும்பு கம்பியால் தாக்கியதில், 10 பேருக்கும் முகம், தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தகவல் அறிந்த புரூஸ்பேட் போலீசார் அங்கு சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, பல்லாரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், ஆந்திராவை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் ஹேமந்த், 15, உயிரிழந்தார். வார்டன், இன்னொரு மாணவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொலை செய்த மாணவர் போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு, போதை தலைக்கு ஏறியதால் என்ன செய்கிறோம் என்று தெரியாமல், சக மாணவர்களை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியதாக, ஹேமந்த்தின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்லாரி எஸ்.பி., சுமன் பன்னேகர் கூறுகையில், ''தலைமறைவாக உள்ள மாணவனை பிடிக்க தனிப்படை அமைத்து உள்ளோம். இறந்த மாணவரின் பெற்றோர் அளித்த புகாரில், தனியார் பள்ளி நிர்வாகம் மீதும் வழக்கு பதிவாகி உள்ளது. மாணவரை கைது செய்த பின்னரே, கொலைக்கான காரணம் தெரியவரும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Raj
மார் 09, 2026 11:56

போதை பொருள் ஒழிப்பை தீவிர படுத்தவில்லையென்றால் பள்ளி மாணவர்கள் எல்லாம் பயங்கரவாதிகளாக மாறிவிடுவார்கள். மத்திய, மாநில அரசாங்கள் எல்லா பள்ளி, கல்லூரிகளையும் தீவிரமாக சோதனை செய்யவேண்டும். அருகில் உள்ள கடைகளையும், ஸ்டோர்களையும் சோதனை செய்து அகற்ற படவேண்டும்.


Chinnappan Arulappan
மார் 09, 2026 16:07

அரசுகள் கேவல சாராயம் விற்பதையும் சீக்கிரம் நிறுத்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை