ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலர் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி
புதுடில்லி:டில்லியில், 2020ல் நடந்த கலவரத்தில் உளவுத்துறை அலுவலர் அங்கித் சர்மா கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டது. குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமைப் பதிவேடு ஆகிய மத்திய அரசின் சட்டதிருத்தத்துக்கு எதிராக, வடகிழக்கு டில்லியில் 2020ல் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் கலவரம் வெடித்தது. இதில், 53 பேர் உயிரிழந்தனர். அடுத்த சில தினங்களில், கலவரம் நடந்த இடத்தின் அருகே மத்திய உளவுத்துறை அலுவலர் அங்கித் சர்மாவின் இறந்த உடல் மீட்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசேன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளாக சிறையில் உள்ள தாஹிர் உசேன் ஏற்கனவே நான்கு முறை தாக்கல் செய்த ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன . இந்நிலையில், ஐந்தாவது முறையாக உயர் நீதிமன்றத்தில் உசேன் தாக்கல் செய்த ஜாமின் மனு, நீதிபதி நீனா கிருஷ்ணா பன்சால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பெரிய சதித்திட்டம் தீட்டி கொடூரமான முறையில் கொலை நடந்துள்ளது. கலவரக் கும்பலால் அங்கித் சர்மா இழுத்துச் செல்லப்பட்டு உள்ளார். தாக்குதல்களால் அவரது உடலில் 51 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. கொலை செய்த பின், உடலை கால்வாயில் வீசியுள்ளனர். இவை அனைத்தும் குற்றத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது. இந்தக் கொலையில் தாஹிர் உசேன் முக்கிய நபராக இருந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜாமின் மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.