உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீசை அடித்து உதைத்த மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு சிறை

போலீசை அடித்து உதைத்த மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு சிறை

நாக்பூர்: மஹாராஷ்டிராவில், போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ., ஹர்ஷ்வர்தன் ராய்பன் ஜாதவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தன் ராய்பன் ஜாதவ், 47, தற்போது பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியில் உள்ளார்; இதற்கு முன், சிவசேனா, மஹாராஷ்டிரா நிவநிர்மாண் சேனா கட்சிகளிலும் இருந்துள்ளார். பா.ஜ., தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராவ்சாகேப் தன்வேயின் மருமகனான ஹர்ஷ்வர்தன் ராய்பன் ஜாதவ், சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள கன்னட் தொகுதியில், 2009ல், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா சார்பில் போட்டியிட்டு வென்றார். இதே தொகுதியில், 2014ல், சிவசேனா சார்பில் போட்டியிட்டு வென்று, இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ., ஆனார். கடந்த 2014 டிசம்பரில், நாக்பூர் மாவட்டத்தின் சோனேகான் என்ற இடத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில், உத்தவ் தாக்கரே தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் பராக் ஜாதவை, ஹர்ஷ்வர்தன் ராய்பன் ஜாதவ் கன்னத்தில் பலமுறை அறைந்தார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு ஜாமின் அளிக்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகாததால், கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான போது, ஹர்ஷ்வர்தன் ராய்பன் ஜாதவ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிந்ததை அடுத்து, சமீபத்தில், கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதி ஆர்.ஜே.ராய் தீர்ப்பு அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய ஹர்ஷ்வர்தன் ராய்பன் ஜாதவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sudha
ஆக 08, 2025 18:52

இந்த மொத்த கதையில் ஆபாசமான நிகழ்வு, இருதரப்பு வாதங்களாம் . எந்த கழுதைக்காக எந்த கழுதை வாதிட்டது? போலீஸ் காரரை அறைவது விவாதம் செய்து முடிவு செய்ய வேண்டிய குற்றமா? எனக்கு தெரிந்து ஜாதவ் என்பது பட்டியல் இனம்.


நிக்கோல்தாம்சன்
ஆக 08, 2025 08:09

இவருக்கு சிறை கொடுத்த நீதிமன்றம் சித்தராமையா என்ற மனிதர்க்கு என்ன தண்டனை கொடுத்தது


புதிய வீடியோ