உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரபல கல்லுாரிகளில் படிக்க இடம் அளிப்பதாக பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி மோசடி

பிரபல கல்லுாரிகளில் படிக்க இடம் அளிப்பதாக பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி மோசடி

புதுடில்லி: பிரபல கல்லுாரிகளில் படிக்க இடம் அளிப்பதாக போலி எஸ்.எம்.எஸ்., அனுப்பி, பல பெற்றோரை ஏமாற்றி, பல கோடி ரூபாய் சுருட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 1.34 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது, கல்லுாரிகளில் மாணவர்கள் படிக்க விண்ணப்பம் மற்றும் சேர்க்கை காலம். பிரபல கல்லுாரிகளில் சேர, லட்சக்கணக்கில் பணம் கொடுக்க பல பெற்றோர் தயாராக உள்ளனர். அதை பயன்படுத்தி, அவர்களின் முகவரி மற்றும் போன் எண்ணை எப்படியோ பெற்று, மோசடி நடந்துள்ளது. டில்லி அருகே உள்ள காசியாபாத் இந்திராபுரம் என்ற இடத்தை சேர்ந்தவர்கள் பி.டெக்., படித்த ஸ்ரீவத்சவா, 35, மற்றும் காமர்ஸ் படித்து முடித்த சின்மயா சின்ஹா, 32. இவர்கள் இருவரும் பிரபல கல்லுாரிகளில் படிக்க மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அவர்களிடம் பல லட்சம் ரூபாய்களை பெற்று மோசடி செய்து வந்துள்ளனர். கல்லுாரி வளாகம் தவிர்த்து, பிற இடங்களில் செயல்பட்ட அலுவலகங்களுக்கு பெற்றோரை வரவழைத்து, தங்கள் மோசடியை அரங்கேற்றி வந்துள்ளனர். இதற்காக அவர்கள், 'மேனேஜ்மென்ட் கோட்டா'வின் இடம் அளிப்பதாக கூறி, ஏமாற்றி வந்துள்ளனர். டில்லி போலீசில் ஏட்டாக இருக்கும் பெண் ஒருவரின் மகனை, குரு கோவிந்த் இந்திராபிரஸ்தா பல்கலைக்கழகத்தில் சேர்க்க விண்ணப்பம் அளித்திருந்தார். அதை எப்படியோ அறிந்த இருவரும், அந்த பெண் ஏட்டுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி, அந்த கல்லுாரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் அவரின் மகனை படிக்க வைக்க, சீட் கிடைத்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., அனுப்பினர். அதை உண்மை என நம்பிய அந்த பெண் ஏட்டு, 2 லட்சம் ரூபாயை கொடுத்த போது தான், இருவரின் நடவடிக்கை மீது சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இடங்களில் இருந்து, 1.34 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். அந்த பெண் ஏட்டு போல, ஏராளமானோர் தங்கள் வாரிசுகளுக்கு பிரபல கல்லுாரிகளில் சீட் பெற்றதாக வந்த எஸ்.எம்.எஸ்., செய்திகளை காட்டி, பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர் என்பது தெரிந்தது. அவர்களில், 31 பேர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த மோசடி கும்பல் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை