மேலும் செய்திகள்
அதானி மகனுக்கு ஆடம்பரம் இல்லாத எளிமையான திருமணம்
22-Jan-2025
ஆமதாபாத் :பிரபல தொழிலதிபரும், கோடீஸ்வரருமான கவுதம் அதானியின் மகன் ஜீத்தின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்த நிலையில், சமூக பணிகளுக்கு 10,000 கோடி ரூபாயை நன்கொடையாக கவுதம் அதானி அளித்துள்ளார்.இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர், கவுதம் அதானி. இவரது இளைய மகன் ஜீத் அதானி மற்றும் சூரத் வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள் திவாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. எளிமையான முறை
இவர்களது திருமணம் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள சாந்திகிராமில் நேற்று முன்தினம் நடந்தது. மிகவும் ஆடம்பரமாக, பிரமாண்டமாக இந்த திருமணம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மிகவும் எளிமையான முறையில் முக்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ திருமணம் நடந்துள்ளது. ஜெயின் மற்றும் குஜராத்தி சமூகங்களின் கலாசாரத்தின்படி திருமண சடங்குகள் நடந்தன. இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட கவுதம் அதானி, 'ஜீத் - திவா திருமணம் பாரம்பரிய முறைப்படி, ஆமதாபாதில் நடந்து முடிந்தது.இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனைவரையும் அழைக்க முடியவில்லை. 'இதனால், மன்னிப்பு கோருகிறேன். உங்கள் அனைவரின் அன்பும், ஆசீர்வாதமும் மணமக்களுக்கு வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார். திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தி முடித்த கவுதம் அதானி, சமூகப் பணிகளுக்காக 10,000 கோடி ரூபாயை நன்கொடையாகவும் வழங்கியுள்ளார்.சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக இந்த நன்கொடை அளிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மலிவு விலை
இது தொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், 'நன்கொடையாக வழங்கப்படும் இந்த பணம், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் மலிவு விலையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க செலவிடப்படும். 'இது தவிர, மலிவு விலையில் உயர்மட்ட கே - 12 பள்ளிகள் மற்றும் வேலைவாய்ப்புடன் மேம்பட்ட உலகளாவிய திறன் அகாடமிகளின் வலையமைப்பை அணுகுவதில் கவனம் செலுத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
22-Jan-2025