உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை

யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை

புதுடில்லி: யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய சின்னங்களுக்கான பட்டியலில் தமிழகத்தின் செஞ்சிக் கோட்டை உட்பட மராத்திய கோட்டைகள் இடம்பெற்றுள்ளதை ஐ.நா., உறுதி செய்துள்ளது. யுனெஸ்கோ எனப்படும் ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு, பாரம்பரிய சின்னத்தின் சரித்திர காலம், கலைபடைப்புத் தன்மை உள்ளிட்ட சிறப்புகளின் அடிப்படையில், சர்வதேச பாரம்பரிய நினைவு சின்னங்களுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது. அந்த வகையில், மஹாராஷ்டிராவில் உள்ள மராத்திய கோட்டைகள் கொண்ட நிலப்பரப்புகளில் உள்ள வரலாற்று இடங்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த தகவலை யுனெஸ்கோ அமைப்பு நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக தன் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் புதிய கல்வெட்டு: இந்தியாவின் மராத்திய ராணுவ நிலப்பரப்புகள்' என, தெரிவித்துள்ளது. 2024 - 25ம் ஆண்டிற்கான பட்டியலில் மராத்திய கோட்டைகள் இடம்பெறுவது தொடர்பான முடிவு, ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில் நடைபெற்று வரும் உலக பாரம்பரிய குழுவின் 47வது அமர்வின் போது எடுக்கப்பட்டது. இதன்படி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்களுக்கான பட்டியலில், மஹாராஷ்டிரா ராணுவ நிலப்பரப்புகளின் கீழ் வரும் அங்குள்ள சல்ஹெர், சிவனேரி, லோஹ்காட், கண்டேரி, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா, விஜய் துர்க், சிந்துதுர்க் கோட்டைகளும், தமிழகத்தில் உள்ள செஞ்சி கோட்டையும் இடம்பெற்றுள்ளன. இந்த மராத்திய கோட்டைகள், 17 மற்றும்19ம் நுாற்றாண்டுகளுக்கு இடையே உருவானவை.

ராஜதந்திரம்

எதிரிகளால் எளிதில் கைப்பற்ற முடியாத வகையில், மலை, குன்றுகளின் உச்சியில், கடல் அருகிலும் இந்த கோட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோட்டைகள் அனைத்தும் 17 முதல் 19ம் நுாற்றாண்டு துவக்க காலம் வரை கட்டப்பட்டவை. இந்த கோட்டைகள், மராத்தியர்களின் கட்டுமான திறமையும், ராஜதந்திரத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

இந்தியர்கள் மகிழ்ச்சி!

இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த கவுரவத்தால் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். மராத்தியர்களால் உருவாக்கப்பட்ட 12 அற்புதமான கோட்டைகள் உள்ளன. அவற்றில் 11 மஹாராஷ்டிராவில் உள்ளன. ஒன்று தமிழகத்தில் உள்ளன. இந்த சிறப்பு மிக்க கோட்டையை பார்வையிட்டு, மராத்திய பேரரசின் பெருமை மிகுந்த வரலாறு பற்றி அறிய நான் அனைவரையும் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வீரம் செறிந்த வரலாறு!

இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: செஞ்சி கோட்டை, தமிழ்நாட்டின் வீரமிக்க வரலாற்றையும், பண்பாட்டுப் பெருமையையும் உலகுக்கு எடுத்துரைக்கும் ஒரு மாபெரும் அரண் கட்டமைப்பு. யுனெஸ்கோ இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையை உலக புராதன சின்னமாக அறிவித்திருப்பது, பெருமிதமும் மகிழ்ச்சியும் தருகிறது. இக்கோட்டையின் அழிவில்லாத கட்டமைப்பும், மூன்று மலைகளை அரணாகக் கொண்டு பரந்து விரிந்திருக்கும் அதன் வலிமையும், தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

SUBBU,MADURAI
ஜூலை 12, 2025 11:56

Marathas and Tamilnadu have an interesting history. Not only Jingee in TN was the de-facto capital of Marathas, Ekoji, the half brother of Shivaji Maharaj founded his own kingdom at Thanjavur where Tamil and Telugu literature flourished under him. The Bhosle clan was proficient in South Indian and North Indian languages and also Farsi (Shivaji Maharajs father Shahaji ruled Bengaluru). After state boundaries were drawn on language, Indians became dumber.


முக்கிய வீடியோ