உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 799 அரசு பள்ளிகளில் குடிநீர், மின்சார பிரச்னைகளை களைய அரசு உத்தரவு

799 அரசு பள்ளிகளில் குடிநீர், மின்சார பிரச்னைகளை களைய அரசு உத்தரவு

விக்ரம்நகர்:மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 799 அரசு பள்ளிகளில் தண்ணீர் மற்றும் மின்சார பிரச்னைகளை 15 நாட்களுக்குள் சரிசெய்யும்படி, கல்வி துணை இயக்குநர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து அறிக்கை அளிக்கும்படி கல்வித்துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. பிரச்னைகள் குறித்து தனிப்பட்ட முறையில் தலைமை ஆசிரியர்கள் அறிக்கையை தயார் செய்து, கல்வித்துறையிடம் சமர்ப்பித்தனர். அவற்றை முறையாக தொகுத்து, அரசிடம் கல்வித்துறை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விபரங்கள் குறித்து மாநில அரசின் வட்டாரங்கள் கூறியது: அரசின் 59 பள்ளிகளில் விட்டு விட்டு தண்ணீர் வினியோகம் இருப்பதாகவும், 48 பள்ளிகளில் தண்ணீர் வினியோகமே இல்லை. 22 பள்ளிகள், முழுமையாக டேங்கர் தண்ணீரை நம்பி இருப்பதும் தெரிய வந்தது. இவற்றில் நான்கு பள்ளிகள் இணைப்பு கேட்டு குடிநீர் வாரியத்திடம் விண்ணப்பித்து காத்திருக்கின்றன. மேலும் 64 பள்ளிகள், ஆழ்துளைக்கிணறு அல்லது கிணறுகளில் இருந்து தண்ணீர் பெறுகின்றன. இந்த தண்ணீரின் தரம் கேள்விக்குறி தான். மின்சார பிரச்னையை பொருத்தவரையில் 17 பள்ளிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் செய்யப்பட்டுள்ளது. பெறப்பட்ட விரிவான அறிக்கைகள் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, துணை கல்வி இயக்குநர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து பிரச்னை களையும் 15 நாட்களுக்கு சரி செய்து அறிக்கை அளிக்குமாறு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகள் எந்த இடையூறுமின்றி செயல்படுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குடிநீர் வாரியம் அல்லது மின் வினியோக நிறுவனத்துடன் இணைந்து, பட்டியலின்படி அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் சுகாதாரத்துறையுடன் இணைந்து தண்ணீரின் தரத்தை பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மின்தடை ஏற்படும் பள்ளிகளுக்கு உடனடி தேவையாக ஜெனரேட்டர்களை ஏற்பாடு செய்யவும், சோலார் பேனல்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும் வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !