உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 23,500 கோவில்களில் அறங்காவலர் குழு இல்லை யாருமே விண்ணப்பிக்கவில்லை என்கிறது அரசு

23,500 கோவில்களில் அறங்காவலர் குழு இல்லை யாருமே விண்ணப்பிக்கவில்லை என்கிறது அரசு

புதுடில்லி, தமிழகத்தில் 23,500 கோவில்களில் அறங்காவலர் குழு இல்லை என்றும், அதற்கு யாருமே விண்ணப்பிக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக கோவில்களை நிர்வகிக்க அறங்காவலர்கள் குழுவை அமைக்கக் கோரி, ஹிந்து தர்ம பரிஷத் என்ற அமைப்பு, 2021 நவம்பரில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. குழுவில் முன்னாள் நீதிபதி, சமூக ஆர்வலர், பக்தர், எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த ஒருவர், ஒரு பெண் ஆகியோர் இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.ஏற்கனவே, ஹிந்து சமய மற்றும் அறக்கட்டளை சட்டத்தில் இது தொடர்பான பிரிவு உள்ளதாக தமிழக அரசு பதில் அனுப்பியது. இருந்தாலும், அந்த சட்டப் பிரிவை தமிழக அரசு செயல்படுத்தாமல் இருப்பதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தர்ம பரிஷத் வழக்கு தொடர்ந்தது. அங்கும் அதே பதிலை அரசு தெரிவித்தது. அதை ஏற்று, 2021 டிசம்பரில் பரிஷத் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தர்ம பரிஷத் மேல் முறையீடு செய்தது. ஹிந்து சமய மற்றும் அறநிலைய சட்டத்தை மேற்கோள் காட்டும் தமிழக அரசு, அதை செயலில் காட்ட மறுப்பதால், தமிழகத்தில் உள்ள, 40,000த்துக்கு மேற்பட்ட கோவில்களின் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை; பல கோவில்கள் சிதிலமாகி உள்ளன. ஆகவே, அனைத்து கோவில்களுக்கும் அறங்காவலர்கள் குழுவை உடனடியாக நியமிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் ஹிந்து தர்ம பரிஷத் கேட்டது. அறங்காவலர் குழுக்களை அமைக்க தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கனவே கால அவகாசம் கொடுத்திருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த் குமார் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, தமிழகம் முழுதும், 31,000 கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டன. ஆனால், போதிய விண்ணப்பங்கள் வராததால், 23,500 கோவில்களில் அறங்காவலர் குழுக்களை அமைக்க முடியவில்லை; இதுவரை 7,500 கோவில்களில் குழுக்கள் அமைக்கப்பட்டுஉள்ளன என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, மற்ற கோவில்களிலும் அறங்காவலர் குழுக்களை நியமிப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்பதை அறிக்கையாக நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணை, பிப்ரவரி மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ