தமிழகத்தில் கனமழை: பம்பையில் முன்னெச்சரிக்கை
சபரிமலை:தமிழகத்தில் புயல், கனமழை தாக்கம் ஏற்படக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு பம்பையில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.வங்கக்கடலில் ஏற்பட்ட புயலின் தாக்கம் கேரளாவிலும் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்திருந்தது.இதையடுத்து பம்பையில் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் தலைமையில் நீர் வளம், மின்துறை, போலீஸ், தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் நிவாரண படையினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பம்பை திருவேணி, ஆராட்டுக்கடவு ஆகிய இடங்களில் உள்ள தடுப்பணைகளில் நீர்மட்டம் 30 செ.மீ., குறைக்கப்பட்டது.பம்பை நதியை பொறுத்தவரை முக்கியமாக திருவேணி பம்பிங் ஹவுஸ் சமீபம் தடுப்பு அணை கட்டப்பட்டு தண்ணீர் சேகரிக்கப்படுகிறது. இந்த தடுப்பணை நிரம்பி வழிந்து ஓடும் தண்ணீர் தான் ஆராட்டுக்கடவில் வந்து பக்தர்களுக்கு குளிக்க உதவுகிறது. தமிழகத்தில் நேற்று பலத்த மழை பெய்தும் சபரிமலையில் அதன் தாக்கம் இல்லை. லேசான வெயில் அடித்ததால் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.