ஹெலிகாப்டர் விபத்து குஜராத்தில் 3 பேர் பலி
போர்பந்தர்: குஜராத்தில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிரிழந்தனர்.குஜராத்தின் போர்பந்தரில் உள்ள விமான நிலையத்தில், கடலோர காவல் படைக்கு சொந்தமான, 'துருவ்' இலகுரக ஹெலிகாப்டரில் மூன்று பேர் நேற்று பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சி முடித்து, விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது அந்த ஹெலிகாப்டர் எதிர்பாராதவிதமாக தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.தகவலறிந்து வந்த மீட்புப்படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதைத்தொடர்ந்து, அதில் சிக்கிய மூவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.அதன்பின் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி மூவரும் உயிரிழந்தனர்.இந்த விபத்திற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, இந்திய கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த போர்பந்தர் பகுதியில் கடலோர காவல்படையின் விமானம், விபத்தில் சிக்குவது இது முதல் முறையல்ல. இதற்கு முன், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர் ஒன்று அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், மூன்று பேர் உயிரிழந்தனர்.