ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை புறக்கணிக்கும் மருத்துவமனைகள்
சண்டிகர்: 'ஆயுஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றோருக்கான நிலுவை தொகையை ஹரியானா அரசு வழங்காததால், 'அத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க முடியாது' என, அம்மாநில மருத்துவமனைகள் அறிவித்துள்ளன. 'ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்கியா' திட்டம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப் படுகிறது. முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., ஆட்சியில் உள்ள ஹரியானாவில் இத்திட்டத்தின் கீழ் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் சேவை வழங்குகின்றன. இந்த மருத்துவமனைகளுக்கு மாநில அரசு 490 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது. இது குறித்து, ஐ.எம்.ஏ., எனப்படும், இந்திய மருத்துவ சங்கத்தின் ஹரியானா மாநில பிரிவின் செயலர் திரேந்தர் சோனி நேற்று வெளியிட்ட அறிக்கை: தனியார் மருத்துவமனைகளில் அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றோருக்கான நிலுவைத் தொகைகளை அரசு திருப்பிச் செலுத்தத் தவறியுள்ளது. 490 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாக அரசே ஒப்புக்கொண்டுள்ளது. இந்தத் தொகை செலுத்தப்படாமல், சிகிச்சையை தொடர்ந்தால் நிலுவை மேலும் அதிகரிக்கும். தனியார் மருத்துவமனைகள் என்ன செய்ய முடியும்? நிலுவைத் தொகைகள் சரியான நேரத்தில் கிடைக்காவிட்டால் எவ்வாறு செயல்பட முடியும். இது குறித்து அரசுடன் நடத்திய பேச்சு திருப்திகரமாக இல்லை. எனவே ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளோம். நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.