ஒரு கிலோ குப்பைக்கு ரூ.12 ஹோட்டல்களுக்கு கட்டணம்
பெங்களூரு: அதிகமாக குப்பை உருவாகும் ஹோட்டல்களில், குப்பை அள்ள கட்டணம் வசூலிக்க பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஒரு கிலோ குப்பைக்கு 12 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் அளித்த பேட்டி:விதிமுறைப்படி வீடு, வீடாக சென்று குப்பையை சேகரித்து அப்புறப்படுத்துவது, பெங்களூரு மாநகராட்சியின் பொறுப்பு. ஹோட்டல்கள் உட்பட பல்வேறு இடங்களில் மிக அதிகமாக குப்பை உருவாகிறது. இதையும் மாநகராட்சி குப்பை வாகனங்களில் போடுகின்றனர். இதனால் குப்பையை அள்ளுவது, பெரும் பிரச்னையாக உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பே, சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி, அந்தந்த இடங்களில் உருவாகும் குப்பையை, தாங்களே அப்புறப்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டது. ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களிடம் கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.ஒரு கிலோ குப்பைக்கு 12 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். ஒருவேளை 12 ரூபாய் கொடுக்க விரும்பாவிட்டால், குப்பையை அகற்றும் பொறுப்பை அவர்களே ஏற்றுக் கொள்ளலாம். அப்படி செய்தால், மாநகராட்சிக்கு பணம் கொடுக்க வேண்டியது இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.