இந்தியராகும் முன்பே சோனியா பெயர் சேர்க்கப்பட்டது எப்படி? ராகுலிடம் பா.ஜ., கேள்வி
புதுடில்லி:'இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே, காங்., மூத்த தலைவர் சோனியாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றது எப்படி?' என, பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது. பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தேர்தல் கமிஷனின் நடவடிக்கை மீதே சந்தேகம் எழுப்பும் வகையில் ராகுல் தொடர்ந்து பேசி வருகிறார். பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே தேர்தல் கமிஷன் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறார். சட்டமீறல் இந்நிலையில், தேர்தல் கமிஷன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையில், பா.ஜ., தரப்பில் ராகுலிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாள்வியா வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் சட்டத்துக்கு எதிராக, சோனியாவின் பெயர் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இத்தனைக்கும், அப்போது அவர் இந்திய குடியுரிமையை பெறவில்லை. பீஹாரில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக கேள்வி எழுப்பும் ராகுல், அவர்களது கட்சி ஆட்சியில் இருந்தபோது நடந்த இந்த முறைகேடுக்கு பதில் சொல்வாரா? கடந்த, 1980ல் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் சோனியாவின் பெயர் இருக்கிறது. அதற்கு பின், மூன்று ஆண்டுகள் கடந்த பிறகே அவர் இந்திய குடியுரிமை பெற்றார். இப்போதும் அவர் இத்தாலிய குடியுரிமை வைத்திருக்கிறார். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டபோது, பிரதமராக இருந்த இந்திரா, அவரது மகன்கள் ராஜீவ், சஞ்சய் என அனைவருமே பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் தான் வசித்து வந்தனர். அப்போது சோனியாவின் பெயர் புதுடில்லியில் உள்ள 145வது வாக்குச்சாவடியில், 388 வது வரிசையில் இடம் பெற்றிருந்தது. இது அப்பட்டமான சட்ட மீறல். இந்திய குடியுரிமை பெற்றவரின் பெயரை மட்டுமே வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும். இதைத் தொடர்ந்து எழுந்த ஆட்சேபம் காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து 1982ல் அவரது பெயர் நீக்கப்பட்டது. பின், மீண்டும் 1983ல் சேர்க்கப்பட்டது. இருந்தாலும், சோனியாவின் பெயர் எப்படி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பது இன்றளவும் இருக்கும் கேள்வி. 15 ஆண்டுக்குப் பின் ஏனெனில் 1983, ஜனவரி 1ம் தேதி வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு, 140வது வாக்குச்சாவடியில் 236வது வரிசையில் இடம் பெற்றது. ஆனால், இந்திய குடியுரிமையை அவர் பெற்றதோ அதே ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி தான். இந்திய குடியுரிமைக்கு தேவையான எந்தவொரு அடிப்படை விஷயங்களும் நிறைவேற்றப்படாமலேயே இரு முறை அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தது. எங்களது கேள்வி என்னவெனில், ராஜிவ் உடன் திருமணம் நடந்து முடிந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகே இந்திய குடியுரிமையை சோனியா ஏற்றுக் கொண்டார். அதற்கு என்ன காரணம்? தாமதமாக இந்திய குடியுரிமையை ஏற்றநிலையில், இது தேர்தல் முறைகேடு ஆகாதா? இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.