உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்கவுன்டர் அச்சத்தால் எஸ்கேப் ஆனேன்: எம்.எல்.ஏ., விளக்கம்

என்கவுன்டர் அச்சத்தால் எஸ்கேப் ஆனேன்: எம்.எல்.ஏ., விளக்கம்

பாட்டியாலா : பஞ்சாபில், கைது செய்ய வந்த போலீசாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, 'என்கவுன்டர்' அச்சம் காரணமாகவே தப்பியோடியதாக புதிய வீடியோ வெளியிட்டுள்ளார். பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சனுார் தொகுதியின் எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. ஆளும் ஆம் ஆத்மியைச் சேர்ந்த இவர் மீது ஜிராக்பூரைச் சேர்ந்த பெண் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். ஹர்மீத் சிங் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் ஹர்மீத் சிங் பதுங்கினார். அவரை கைது செய்ய போலீசார் கடந்த 2ம் தேதி சென்றபோது, ஹர்மீத் சிங்கும், அவரது கூட்டாளிகளும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரில் தப்பிச் சென்றனர். ஹர்மீத் சிங்கை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், ரகசிய இடத்தில் இருந்து எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: போலீஸ் துறையில் எனக்கு தெரிந்த நபர்கள் சிலர், என்னை என்கவுன்டர் செய்ய திட்டமிட்டு இருப்பதாக எச்சரித்தனர். எட்டு எஸ்.பி.,க்கள், எட்டு டி.எஸ்.பி.,க்கள், என்கவுன்டர் நிபுணர் பிக்ராம் பிரார் மற்றும் நுாற்றுக்கணக்கான போலீசார் என்னை பிடிக்க வந்தபோது பயந்துவிட்டேன். போலீசார் கைது செய்ய வந்தபோது, யாரையும் நான் துப்பாக்கியால் சுடவில்லை. அவர்களை தாக்கியதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. போலீசாரை நான் மதிக்கிறேன். ஆனால், என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Natarajan Ramanathan
செப் 04, 2025 23:49

துப்பாக்கியால் சுட்டபோதே பதிலுக்கு சுட்டு என்கவுண்டர் செய்திருக்க வேண்டும். பஞ்சாப் போலீஸ் வேஸ்ட்.


புதிய வீடியோ