ஐ - பேக் இணை நிறுவனரை 10 நாள் விசாரிக்க அனுமதி
புதுடில்லி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான, 'ஐ - பேக்' நிறுவனத்தின் இணை நிறுவனரும், இயக்குநருமான வினேஷ் சந்தேலை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சியான பா.ஜ.,வுக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு, 'ஐ - பேக்' நிறுவனம் தேர்தல் வியூகங்களை வகுத்து தருகிறது. நிலக்கரி ஊழல் மூலம் பெறப்பட்ட, 50 கோடி ரூபாய் பணத்தை, 'ஐ - பேக்' நிறுவனம் சட்ட விரோதமாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது குறித்து அமலாக்கத் துறை - சி.பி.ஐ., தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றன. இது தொடர்பாக கொல்கட்டாவில் உள்ள, 'ஐ - பேக்' நிறுவனத்தின் இயக்குநரும், திரிணமுல் காங்., நிர்வாகியுமான பிரதீக் ஜெயின் அலுவலகத்தில், கடந்த ஜனவரியில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அதிரடியாக வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக, டில்லியில் உள்ள, 'ஐ - பேக்' நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரும், இயக்குநருமான வினேஷ் சந்தேல் வீட்டில், அமலாக்கத் துறையினர், கடந்த 2ல் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். நேற்று முன்தினம் இரவு, அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வினேஷ் சந்தேலை அமலாக்கத் துறையினர் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. பிரதீக் ஜெயின் மனைவி ஆஜராக சம்மன் பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, 'ஐ - பேக்' நிறுவனரும், இயக்குநருமான பிரதீக் ஜெயின் மனைவி பார்பி ஜெயின், அவரது சகோதரர் புல்கித் ஜெயின் ஆகியோருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.