உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் பரப்பும் அவதுாறுகளை கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டேன்: பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது என்றும் மோடி புகார்

காங்கிரஸ் பரப்பும் அவதுாறுகளை கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டேன்: பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது என்றும் மோடி புகார்

குவஹாத்தி: “நான் சிவபெருமானின் பக்தன், அவதுாறுகளை கண்டு ஒருபோதும் அஞ்ச மாட்டேன். அவதுாறு என்ற விஷத்தை விழுங்கி விடுவேன்,” என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேலும், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின்போது, நம் ராணுவத்தின் பக்கம் நிற்காமல், பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் பக்கம் காங்கிரஸ் நின்றதாகவும் குற்றஞ்சாட்டினார். பீஹாரில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டத்தின்போது, மேடையேறிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென் மோடி குறித்து அவதுாறாக பேசினார். இதனால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள், காங்கிரஸ் சார்பில், பிரதமர் மோடியின் தாயார் முகச்சாயலுடன் கூடிய ஒருவர் இடம்பெறும் செயற்கை நுண்ணறிவு வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில், மிசோரம், மணிப்பூர், அசாம், மேற்கு வங்கம், பீஹார் என வடகிழக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். அசாம் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் முடிவுற்ற திட்டங்களை நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து தரங் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியினர் என்னை குறிவைத்து அவதுாறு பரப்பி வருவதை நான் நன்கு அறிவேன். மக்கள் தான் எனக்கு கடவுள்; என் வலிகளை அவர்களிடம் வெளிப்படுத்தாமல் வேறு யாரிடம் வெளிப்படுத்துவேன். மக்கள் தான் எனக்கு குரு, தெய்வம். அவர்கள் தான் என்னை இயக்குபவர்கள். என்னை இயக்கும், 'ரிமோட் கன்ட்ரோல்' வேறு யாரிடமும் இல்லை. நான் சிவபெருமானின் பக்தன். அவதுாறு என்ற விஷத்தை அப்படியே விழுங்கி விடுவேன். * காங்., மீது விமர்சனம் 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, நம் ராணுவத்திற்கு பக்கபலமாக நிற்காமல், பாகிஸ்தான் வளர்த்த பயங்கரவாதிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. நம் நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும் ஊடுருவல்காரர்களுக்கும், தேசவிரோத சக்திகளுக்கும் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கிறது. கடந்த 1962ம் ஆண்டு, சீன போரின் போது, காங்கிரசின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஏற்படுத்திய காயங்களில் இருந்து அசாம் மக்கள் இதுவரை மீளவே இல்லை. நம் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஊடுருவல்காரர்களை, பா.ஜ., ஒருபோதும் அனுமதிக்காது. நம் நிலத்தை அபகரிக்க விடமாட்டோம். பாரத ரத்னா விருது பெற்ற இந்த மாநிலத்தைச் சேர்ந்த பூபென் ஹசாரிகாவை காங்கிரஸ் அவமதித்தது எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. பா.ஜ.,வின் இரட்டை இன்ஜின் அரசு, அசாமின் பெருமைமிக்க புதல்வரான பூபென் ஹசாரிகா போன்றவர்களின் கனவுகளை நனவாக்கி வருகிறது. அசாமில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தும், பிரம்மபுத்திராவின் குறுக்கே வெறும் மூன்று பாலங்களை மட்டுமே கட்டி எழுப்பியது. ஆனால், பா.ஜ., ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில், ஆறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன. உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக, இந்தியா மிளிர்கிறது. இதில், அசாம் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் மட்டும் 13 சதவீதம். இரட்டை இன்ஜின் அரசு வாயிலாக இந்த சாதனையை எட்ட முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.18,530 கோடி திட்டங்கள்

அசாம் சென்ற பிரதமர் மோடி தரங் மற்றும் கோலாகட் மாவட்டங்களில், 18,530 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். மங்கல்டாய் பகுதியில், 570 கோடி ரூபாய் மதிப்பில் உருவாகும் தரங் மருத்துவக் கல்லுாரி, நர்சிங் கல்லுாரி உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். நரேங்கி - குருவா இடையே 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான பாலம், மேகாலயாவின் ரி போய் மாவட்டத்துடன், அசாமின் காமரூப் மற்றும் தரங் மாவட்டங்களை இணைக்கும் 4,530 கோடி ரூபாய் மதிப்பிலான குவஹாத்தி வட்ட சாலை இணைப்பு திட்டங்களையும் துவக்கி வைத்தார்.

உலகின் முதல் மூங்கில் எத்தனால் ஆலை

அசாமில் உள்ள நுமாலிகர் என்ற இடத்தில் மூங்கில் மூலம் எத்தனால் தயாரிக்கும் நுமாலிகர் சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். கடந்த 2019 பிப்., 9ம் தேதி அன்று இந்த ஆலைக்காக மோடி அடிக்கல் நாட்டினார். வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில்கள் அமோக விளைச்சல் கண்டு வருவதால், அம்மாநில வளர்ச்சிக்கு இந்த எத்தனால் ஆலை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூங்கில் மூலம் இரண்டாம் தலைமுறை பயோ எத்தனால் ஆலை அமைந்திருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை. இந்த ஆலை, 5,000 கோடி ரூபாயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பயோ எத்தனால் ஆலையில், பூஜ்ய கழிவு மேலாண்மை பராமரிக்கப்படுகிறது. அதன்படி மூங்கிலின் அனைத்து பகுதிகளும், எத்தனால் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும். நான்கு வடகிழக்கு மாநிலங்களுக்கு பயன் தரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ஆலை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000 பேர் வேலை வாய்ப்பு பெறுவர். அதே போல், 7,230 கோடி ரூபாய் மதிப்பில் இந்த சுத்திகரிப்பு ஆலையில், பெட்ரோலிய பொருட்களுக்கான புதிய பிரிவையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார். தற்போது நாடு முழுதும் பெட்ரோலில், தாவரங்களில் இருந்து கிடைக்கும் எத்தனால் கலக்கப்பட்டு, 'இ - 20' பெட்ரோல் என்ற பெயரில் விற்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ