தெலுங்கானாவில் பந்த்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஐதராபாத் : ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில், நேற்று நடந்த முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக, அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆந்திரா தெலுங்கானா பகுதியில் உள்ள, ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மந்தாதி ஆதிரெட்டி, 23. டில்லியில், பார்லிமென்ட் அருகேயுள்ள மரத்தில், சில நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணையில், தனித்தெலுங்கானா மாநில கோரிக்கையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதைக் கண்டித்து, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆதிரெட்டியின் தற்கொலைக்குக் காரணமான, ஆந்திர அரசின் 'பாசிச நடவடிக்கை'களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானாவில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதாக, தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடந்தது.ஐதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா பகுதிகளில், நேற்று பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தெலுங்கானா பகுதியில், நேற்று இயக்கப்பட்ட ஆந்திர மாநில போக்குவரத்து கழகப் பேருந்துகளை, போராட்டக்காரர்கள் ஆங்காங்கே மறித்து சிறைபிடித்தனர். தனியார் வாகனங்களும் இயக்கப்படவில்லை.போராட்டக்காரர்கள், ஆதிரெட்டியின் மரணத்திற்கு கண்டனங்களை எழுப்பியபடி சென்றனர். அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்டவையும் மூடப்பட்டிருந்தன. இந்த முழு அடைப்புப் போராட்டத்தின் காரணமாக, தெலுங்கானா பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே நடந்த சிறு சிறு வன்முறைச் சம்பவங்களைத் தவிர, பெரிய அளவில் வன்முறைகள் ஏதும் நடக்கவில்லை.மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்டில்லியில் தற்கொலை செய்து கொண்ட ஆதிரெட்டியின் உடல், நேற்று முன்தினம் மாலை விமானம் மூலம் ஐதராபாத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல, தெலுங்கானா ஆதரவாளர்கள் முயன்றனர். ஆனால், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதுகுறித்து, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவின் மகனும், எம்.எம்.ஏ.,வுமான ராமா ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தெலுங்கானாவுக்காக உயிர்துறந்த ஆதிரெட்டியின் இறுதி ஊர்வலத்திற்கு, அனுமதி மறுத்ததன் மூலம், ஆதிரெட்டியை, ஆந்திர அரசு அவமானப்படுத்திவிட்டது. இதே அவமானம் டில்லியிலும் அரங்கேறியது. இதுகுறித்து, நாங்கள் தேசிய மனித உரிமைகள் கமிஷனில் புகார் செய்ய உள்ளோம். டில்லியில், ஆந்திர பவன் அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம், கோபத்திலும், வேதனையிலும் நடந்தது. அதனை, ஊடகங்கள் பெரிதாக்கி விட்டன. இவ்வாறு ராமா ராவ் கூறினார்.