பிறப்பு அதிகரிப்பு; இறப்பு குறைவு பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
புதுடில்லி:'தலைநகர் டில்லியில் புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் தற்போதுள்ள அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகின்றன' டில்லி பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. டில்லி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையை, டில்லி சட்டசபையில் நிதி அமைச்சர் அதிஷி சிங் நேற்று தாக்கல் செய்தார்.ஆய்வறிக்கை குறித்து அவர் பேசியதாவது:இந்த நிதியாண்டில் நவம்பர் 25-ம் தேதி வரை டில்லியில் 7,493 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2021ல் 13.13 ஆக இருந்த பிறப்பு விகிதம், 2022ல் 14.24ஆக அதிகரித்துள்ளது. ஆயிரம் பேரில் இறப்பு விகிதம் 2021ல் 8.28 ஆக இருந்தது. அதுவே, 2022ல் 6.07 ஆக குறைந்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி டில்லி அரசு 38 மல்டி ஸ்பெஷாலிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், 174 அலோபதி மருந்தகங்கள், 60 ஆரம்ப சுகாதார மையங்கள், 521 ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் வாயிலாக மருத்துவச் சேவை செய்து வருகிறது.அதேபோல 30 பாலி கிளினிக்குகள், 55 ஆயுர்வேத மருந்தகங்கள், 25 யுனானி மருந்தகங்கள், 117 ஹோமியோபதி மருந்தகங்கள் மற்றும் 46 பள்ளி சுகாதார கிளினிக்குகள் டில்லியில் செயல்படுகின்றன.தலைநகர் டில்லியில் தற்போது 11 புதிய மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், விகாஸ்புரி மருத்துவமனை இந்தாண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும்.மேலும், தற்போது இயங்கி வரும் 15 மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2020ம் ஆண்டு அக்டோபரில் லோக்நாயக் அரசு மருத்துவமனையில் 1,500 படுக்கைகள் கொண்ட அதிநவீன அதிநவீன கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாக மாறும்.டில்லி அரசில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான செலவு 2015 - 2016ல் 1,999.63 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே, 2022- - 2023ல் 4,158.11 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.