உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சு துவக்க இந்தியா - நியூசிலாந்து இடையே உடன்பாடு

தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சு துவக்க இந்தியா - நியூசிலாந்து இடையே உடன்பாடு

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான் இடையேயான சந்திப்பில், ராணுவ துறையில் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இருதரப்பு தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சு துவங்குவதற்கு உடன்பாடும் ஏற்பட்டுள்ளது.பசிபிக் நாடான நியூசிலாந்தின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சான், ஐந்து நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் வந்தார். டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார். அவருடன் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், தொழில் துறையினர் வந்துள்ளனர். டில்லியில் நேற்று, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் அவர் சந்தித்தார்.இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி - கிறிஸ்டோபர் லக்சான் சந்தித்தனர். இரு தரப்பு உறவுகள் உட்பட பல விஷயங்கள் தொடர்பாக இருதரப்பினரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.நியூசிலாந்தில், இந்தியாவுக்கு எதிரான சில அமைப்புகளின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, கிறிஸ்டோபர் லக்சானிடம் அவர் வலியுறுத்தினார்.இந்த சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தோ - பசிபிக் பிராந்தியம், சுதந்திரமான, பாதுகாப்பான, அனைவருக்குமானதாக இருப்பதை உறுதிசெய்ய இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சியையே விரும்புகிறோம், எல்லையை விரிவுபடுத்துவதில் அல்ல என, இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.சமமான வாய்ப்புகளுடன், பரஸ்பரம் பலனளிக்கக் கூடிய, விரிவான தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுகளை துவக்க இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

பிரதமர் மோடி - நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோர் லக்சான் இடையேயான பேச்சின் முக்கிய அம்சங்கள்:இந்தியா - நியூசிலாந்து விமான சேவை ஒப்பந்தத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் கிடைக்கும். இது, சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை உயர்த்தும்.சுங்க நடைமுறைகளை எளிமையாக்கவும், காலதாமதத்தை குறைக்கவும் இருநாட்டு சுங்கத் துறைகள் இடையே ஒப்பந்தம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு பெரிய பலன் கிடைக்கும்.இரு நாடுகளுக்கும் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுகளை துவக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இருதரப்பு வர்த்தகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதுடன், தடையாக உள்ளவற்றை நீக்குவதும் இதில் அடங்கும்.இரு நாடுகளைச் சேர்ந்த தொழில்முறை நிபுணர்கள் மற்றும் திறனுள்ள தொழிலாளர்கள், பரஸ்பரம் பயணிப்பதை எளிமையாக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இந்தோ - பசிபிக் பெருங்கடல் முன்முயற்சி மற்றும் பேரிடர் மீட்பு உட்கட்டமைப்புக்கான கூட்டமைப்பில் இணைவதற்கு, நியூசிலாந்து முன்வந்துள்ளது.ஒப்பந்தங்கள் கையெழுத்து:1. ராணுவ துறையில் ஒத்துழைப்பு.2. இந்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கும், நியூசிலாந்து சுங்க சேவைக்கும் இடையே பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம்3. தோட்டக்கலை துறையில் இணைந்து செயல்படுதல்4. பருவநிலை மாறுபாடு பிரச்னை 5. கல்வித் துறையில் ஒத்துழைப்பு6. விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram Moorthy
மார் 19, 2025 18:23

நியூசிலாந்து அதிபர் இந்தியாவுக்கு வருகையின் முக்கிய காரணம் சைனாவின் போர் கப்பல்கள் நியூசிலாந்து நாட்டை மிரட்டும் வகையில் சுற்றி வந்ததே முதல் காரணம் அதற்கு முன் குவாட் அமைப்பு நாடான ஆஸ்திரேலியா நாட்டையும் சைனா போர் கப்பல்கள் சுற்றி வந்ததும் ஒரு காரணம்.