உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா - அமெரிக்கா உறவு உலக நன்மைக்கு அவசியம்: அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை

இந்தியா - அமெரிக்கா உறவு உலக நன்மைக்கு அவசியம்: அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை

ஜெயப்பூர்; ''உற்பத்தி, எரிசக்தி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ராணுவ துறைகளில் இந்தியா - அமெரிக்கா வேகம் காட்டத் தவறினால், அது உலகிற்கே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்,'' என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் எச்சரித்தார்.அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நான்கு நாள் பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

இருண்ட காலம்

இந்நிலையில், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடந்த இந்தியா - அமெரிக்க மன்ற கூட்டத்தில் ஜே.டி.வான்ஸ் நேற்று பேசியதாவது:கடந்த காலங்களில் அமெரிக்காவை நிர்வகித்தவர்கள் பிரசங்க மனப்பான்மையுடன் இந்தியாவை அணுகினர். நாங்கள் அப்படி அணுகவில்லை.இந்த, 21ம் நுாற்றாண்டின் எதிர்காலம் அமெரிக்கா- - இந்திய கூட்டுறவின் வலிமையால் தீர்மானிக்கப்படும் என ன் நம்புகிறேன். இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால், 21ம் நுாற்றாண்டு வளமாகவும், அமைதியுடனும் இருக்கும். தவறினால், 21ம் நுாற்றாண்டு மனிதகுலத்திற்கே இருண்ட காலமாக அமையும்.இந்தியாவில் உள்ள கணிசமான இயற்கை வளங்கள், கடல்சார் இயற்கை எரிவாயு மற்றும் கனிமவளங்களின் இருப்பு குறித்து ஆராய நாங்கள் உதவத் தயார்.இந்திய சந்தையில் சில அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிப்பதை கைவிடுவது குறித்து இந்தியா பரிசீலிக்க வலியுறுத்துகிறேன். வணிகத்துக்கான சிறந்த நாடு இந்தியா. இங்கு எங்கள் மக்கள் வர்த்தகம் செய்ய அதிக அணுகலை வழங்க விரும்புகிறோம். இருதரப்புக்குமே இந்த கூட்டணி வெற்றியை தரும்.உற்பத்தி, எரிசக்தி, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ராணுவ துறைகளில் இந்தியா - அமெரிக்கா வேகம் காட்ட தவறினால், அது உலகிற்கே மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

'எப்35' போர் விமானம்

அமெரிக்காவிடம் இருந்து நிறைய ராணுவ உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும் என விரும்புகிறோம். அவை தரத்தில் முதன்மையானவை. எங்களின் ஐந்தாம் தலைமுறை, 'எப்35' போர் விமானங்கள் வாயிலாக இந்திய வான்பரப்பை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய விமானப்படை பாதுகாக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

ஆம்பர் கோட்டையில் வான்ஸ்

ராஜஸ்தான் வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், மனைவி உஷா சிலுகுரி, மகன்கள் இவான், விவேக், மகள் மிராபெல் ஆகியோருடன் ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டைக்கு நேற்று காலை வந்தார்.ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, துணை முதல்வர் தியா குமாரி ஆகியோர் அவர்களை வரவேற்றனர். இரண்டு மணிநேரம் கோட்டையை சுற்றிப்பார்த்த பின், ராம்பாக் பேலஸ் ஹோட்டலுக்கு சென்றனர். வான்ஸ் கூறுகையில், ''என் குழந்தைகள், அமெரிக்க அதிபர் டிரம்புடன் மட்டுமல்ல, இந்திய பிரதமர் மோடியுடனும் நெருக்கமாகி விட்டனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Barakat Ali
ஏப் 23, 2025 08:00

உலகநாடுகள் அமெரிக்காவுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று எச்சரித்த சீனாவுக்கு பதிலடி .....


சமீபத்திய செய்தி