ஆன்லைன் மோசடியில் 2024ல் இந்தியர்கள் இழந்த தொகை ரூ.23,000 கோடி! :
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நம் நாட்டில் கடந்த 2024ல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை குறிவைத்து நடந்த இணைய மோசடிகள் வாயிலாக, விழிப்புணர்வு இல்லாத பொது மக்களிடம் இருந்து 23,000 கோடி ரூபாயை சைபர் குற்றவாளிகள் திருடி உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தரவுகளை வெளியிட்டுள்ளது. 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனைகளில் உலகுக்கே நாம் தான் முன்னோடியாக இருக்கிறோம். நாட்டின் தொலைதுார கிராமங்களில் கூட, யு.பி.ஐ., எனப்படும், 'மொபைல் போன்' செயலி வாயிலாக பணப்பரிமாற்றம் நடப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. தேசிய பரிவர்த்தனை கழகத்தின் தரவுகளின் படி மாதந்தோறும், 20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் யு.பி.ஐ., வாயிலாக பரிவர்த்தனை ஆகிறது. 'டிஜிட்டல்' பொருளாதாரம் மற்றும் இணைய பயன்பாடு எந்த அளவு அதிகரித்துள்ளதோ அதே அளவு இணைய மோசடிகளும் அதிகரித்துள்ளன. 'டேட்டா லீட்ஸ்' என்ற டில்லியைச் சேர்ந்த ஊடக மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிக்கையின்படி, 2022-ல், 'ஆன்லைன்' மோசடிகள் வாயிலாக நம் நாட்டு மக்களிடம் இருந்து திரு டப்பட்ட தொகை 2,306 கோடி ரூபாய். கடந்த, 2023ல் இது, 7,465 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2024ல், 22,842 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டை விட, 10 மடங்கு அதிகரித்துள்ளது. ஆண்டு தோறும் ஆன்லைன் குற்றங்கள் குறித்து மக்கள் அளிக்கும் புகார்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளன. இது 2019ல், 15 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு 20 லட்சத்தை தாண்டியுள்ளது. மோசடி வகைகள் ஆன்லைன் வாயிலாக மோசடியில் ஈடுபடுபவர்கள் மிகவும் தந்திரமாக செயல்பட்டு, ஏமாறும் மக்களின் பணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக தங்கள் கணக்கிற்கு மாற்றிக்கொள்கின்றனர். போலியான மின்னஞ்சல், எஸ்.எ ம்.எஸ்., அல்லது சமூக ஊடகங்கள் மூலம் போலி கணக்குகள் துவங்கி மக்களை ஏமாற்றி, அவர்களின் வங்கி விபரங்கள், கடவுச்சொற்கள், மற்றும் ஓ.டி.பி.,களை பெற்று வங்கி கணக்கில் உள்ள பணத்தை து டைத்து எடுத்து விடுகின்றனர். அடுத்ததாக, 'அமேசான், பிளிப்கார்ட்' போன்ற பிரபலமான, 'ஆன்லைன் ஷாப்பிங்' தளங்கள் அல்லது வங்கி இணையதளங்களைப் போல போலியானவற்றை உருவாக்கி, அதில் பயனர்கள் தரும் வங்கி அட்டை விபரங்களை வைத்து பணத்தை திருடுகின்றனர். டிஜிட்டல் கைது என்ற பெயரில், மக்களை மிரட்டி பணம் பறிக்கும் மோசடியும் தற்போது அதிகரித்து உள்ளது. இந்த முறையில் சட்டவிரோத பொருட்கள் தங்கள் பெயரில் வந்துள்ளதாக கூறி, டிஜிட்டல் மு றையில் கைது செய்வதாக ஏமாற்றுகின்றனர். அதன் பின் விசாரணைக்காக வங்கி கணக்கை முடக்க இருப்பதாக கூறி, கணக்கில் உள்ள பணத்தை அரசுக்கு மாற்றும்படி சொல்லி, கோடிக்கணக்கான பணத்தை சுருட்டுகின்றனர். இணைய மோசடிகள் மூலமாக திருடப்படும் பணத்தை இங்கு பலரது பெயரில் போலி வங்கி கணக்குகள் உருவாக்கி, அதில் டிபாசிட் செய்து, அதில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுக்கு மாற்றுகின்றனர். நடவடிக்கைகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் செயல்படுகிறது. இது இணைய குற்றங்களை தடுக்கவும், பணத்தை மீட்கவும் மத்திய - மாநில அரசின் அமலாக்கத்துறைகளை ஒருங்கிணைக்கும் பணியை செய்கிறது. குற்றம் நடந்த சில நிமிடங்களில் புகார் அளித்தால், பெரும்பாலும் பணத்தை மீட்டு தருகின்றனர். இதற்காக, 1930 என்ற அவசர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளனர். பொதுமக்களுக்கு இணைய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 'மொபைல் போன்' அழை ப்பின் போது மற்றும் சமூ க வலைதளங்கள் வாயிலாக பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் படி அரசு மற்றும் தனியார் வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு தகவல்களை வழங்கி வருகின்றன.