உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கடற்படை ஆதரவு கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கடற்படை ஆதரவு கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

விசாகப்பட்டினம்: நம் கடற்படையின் பலத்தை அதிகரிக்கும் நோக்கில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான ‘சூர்யா’வை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு நேற்று அர்ப்பணித்தார். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள, ‘ஹிந்துஸ்தான்’ கப்பல் கட்டுமான நிறுவனம் சார்பில் மொத்தம் ஐந்து கடற்படை ஆதரவு கப்பல்கள் கட்ட திட்டமிடப்பட்டன. இதற்காக, 19,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் கீழ் முதல் ஆதரவு கப்பலான, ‘சூர்யா’, நேற்று கடற்படையில் முறைப்படி இணைக்கப்பட்டது. இதை நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், ஐந்தாவது ஆதரவு கப்பலுக்கான அடித்தள கட்டமைப்பு பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடற்படை தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், 82 சதவீதம் உள்நாட்டுப் பொருட்களால் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனம் தயாரித்த இக்கப்பல், 43,000 டன் சுமக்கும் திறனும், 734 அடி நீளமும், 103 அடி அகலமும், 30.5 அடி ஆழமும் உடையது. நவீன கட்டுமான முறையைப் பயன்படுத்தியதால், வழக்கமாகப் பல ஆண்டுகள் எடுக்கும் இத்தகைய பிரம்மாண்ட கப்பலின் உலோகம் வெட்டும் பணி 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. நடுக்கடலில் ஒரே நேரத்தில் பல போர்க்கப்பல்களுக்கு தேவையான எரிபொருள், குடிநீர், ஆயுதங்களை உடனுக்குடன் வழங்கும் திறன் படைத்த இந்தக் கப்பலில், அவற்றை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல ஏதுவாக பிரத்யேக கன்டெய்னர்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 20 ஆயிரம் டன் டீசல், 2,500 டன் விமான எரிபொருள், ஆயிரம் டன் குடிநீர் கையாள முடியும். மணிக்கு 37 கி.மீ., வேகத்தில் பயணிக்கும் இக்கப்பலில், அதிநவீன ஏவுகணை தடுப்பு தற்காப்பு அமைப்புகளும், ஹெலிகாப்டர் தளமும் இடம்பெற்றுள்ளன. எதிரி நாட்டு ஏவுகணைகள், நீர்மூழ்கிக் குண்டுகள், கடலடி கண்ணிவெடிகளுக்கு எதிராக தற்காத்து கொள்ளும் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்கப்பலில், அதிநவீன முதன்மை பழுதுபார்ப்பு பணிமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் நடுக்கடலில் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஏற்படும் அவசர தொழில்நுட்பக் கோளாறுகளையும் சரிசெய்யும் நடமாடும் பணிமனையாக இக்கப்பல் செயல்படும்.

ரூ.661 கோடி ஒப்பந்தம்!

நம் கடற்படையில், போர்க்கப்பல்களின் தாக்குதல் திறனை பலப்படுத்தும் நோக்கில், ‘பிரமோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துடன், 661 கோடி ரூபாய்க்கு நம் ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ராணுவ அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் டில்லியில் நேற்று கையெழுத்தானது. இதன்மூலம் போர்க்கப்பல்களில் இருந்து பிரமோஸ் ஏவுகணைகளை இலக்கை நோக்கித் துல்லியமாகச் செலுத்த உதவும் மின்னணு கட்டுப்பாட்டு அமைப்புகள், ஏவுகணையைப் பொருத்தி ஏவும் கருவியான லாஞ்சர்களையும் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தில், பயன்படுத்தப்படும் கருவிகளில், குறைந்தபட்சம் 68 சதவீதம் முற்றிலும் உள்நாட்டுப் பொருட்களாக இருக்கும் எனவும், அடுத்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் பாதுகாப்பு உற்பத்தித் துறையில் பரவலான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை