உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதி கடிதம் அனுப்பிய விவகாரம் ஆக., 19ல் விசாரணை துவக்கம்

ஜனாதிபதி கடிதம் அனுப்பிய விவகாரம் ஆக., 19ல் விசாரணை துவக்கம்

'மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தில், ஜனாதிபதியின் கடிதம் தொடர்பான விசாரணை, ஆக., 19ல் துவங்கும்' என, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அதிரடி மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள், மசோதாக்களுக்கு கவர்னர் மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும்' என, அதிரடி தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பி ஜனாதிபதி திரவுபதி முர்மு, அதற்கு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை மனுவாக மாற்றிய தலைமை நீதிபதி, 'இதை அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும்' என, அறிவித்தார். அதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூரியகாந்த், பி.எஸ்.நரசிம்மா, விக்ரம் நாத், ஏ.எஸ்.சந்துருகர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் கேரள அரசுகள் பதில் மனு தாக்கல் செய்துள்ளன. அதில், 'ஜனாதிபதியின் கடிதத்தை அவருக்கே திருப்பி அனுப்ப வேண்டும். இதில் மேற்கொண்டு விசாரிக்க எதுவும் இல்லை' என, தெரிவித்துள்ளன. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்தெந்த தேதிகளில் யார் யாரிடம் விசாரணை நடத்துவது என்ற பட்டியலை அரசியல்சாசன அமர்வு வெளியிட்டது. அதன்படி, 'முதலில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யலாம். விசாரணையை எதிர்ப்பவர்கள் ஆக., 28, செப்., 2, 3, 9 தேதிகளில் தங்கள் வாதங்களை முன் வைக்கலாம். மாற்றம் 'விசாரணையை நடத்தலாம் என்பவர்கள் ஆக., 19, 20, 21 மற்றும் 26 தேதிகளில் வாதிடலாம்' என தெரிவித்தனர். 'இந்த தேதிகளில் மட்டுமே விசாரணை நடக்கும். இதில் மாற்றம் எதுவும் மேற்கொள்ள முடியாது. ஆக., 12க்குள் வழக்கில் தொடர்புடைய மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் தங்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

GMM
ஜூலை 30, 2025 08:10

தமிழக மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. தமிழக சட்ட பேரவை வரைவு மசோதா உச்ச நீதிமன்ற நீதிபதியின் அதிகாரத்தை கைபற்றி court tabedar வசம் கொடுப்பதற்கு சமம். மிகவும் ஆபத்தில் முடியும். இந்திய ஜனாதிபதியின் கடிதம் தொடர்பான விசாரணை வேலை கொடுத்த முதலாளியை அந்த நிறுவன தொழில் சங்கம் விசாரிப்பதற்கு சமம்.


சிட்டுக்குருவி
ஜூலை 30, 2025 06:20

அரசியலமைப்பு சட்டம் 142 ஒரு மாநில ஆளுநரை அவருடைய பொறுப்பிலிருந்து நீக்க உச்சநீதிமன்றத்திற்ற்கு வழிவகை செயகின்றதா என்றதையும் பகுத்தறியவேண்டும் .


சிட்டுக்குருவி
ஜூலை 30, 2025 03:00

இந்த வழக்கு ஆரம்பம்முதலே தவராக கையாளப்பட்டிருக்கின்றது .இந்திய அரசியல் அமைப்பு சட்டம்பிரிவு 361 இல் உள்ள ,ஜனாதிபதி அல்லது கவர்னர் மீது அவர்கள் ஆற்றும் கடமை மீதான வழக்கு தொடுக்க முடியாது என்ற சட்டம் மீறப்பட்டிருக்கின்றது . மொத்தம் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட சட்டவரைவுகள் 181இல் 9 மட்டுமே ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது .அது ஏன் என்று ஆராயப்படவில்லை . அந்த 9 தீர்மானங்களும் ஆளுநரின் பதவி நீக்கும் சம்பந்தப்பட்டது என்பதால் ,அதற்க்கு மாநில சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதா என்பதை ஆராயப்படவில்லை . விசாரணையின் போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பரிந்துரையான ,அரசியல் அமைப்பு குழுவிற்கு அனுப்பும் பரிந்துரை ஏற்கப்படவுமில்லை, நிராகரிக்கப்படவுமில்லை ,அதனைப்பற்றியதகவல் ஏதும் தீர்ப்பில் குறிப்பிடவும் இல்லை . இந்த வழக்கில் நாட்டின் ஜனாதிபதி வாதியாகவோ அல்லது பிரதிவாதியாகவோ இல்லாதபட்சத்தில் அவருக்கு எதிராக ஒரு தீர்ப்பு அவரின் கருத்துரை கேட்காமலேயே எழுத சட்டத்தில் வழிவகை உள்ளதா என்று தீர்மானிக்கப்படவில்லை . தீர்ப்பு அரசியல் அமைப்பு சட்டம் 142 இல் உள்ள அதிகாரம் படி எழுதப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் உள்ள நிபந்தனைகள் ஆராய்ந்து கடைபிடிக்கவில்லை . உச்சநீதிமன்றம் அரசியல் சாசனம் விதி 142 இன் படி தீர்ப்பு வழங்கினால் அது நாடு முழுவத்திற்ற்கும் பொருந்தக்கூடியது என்பதால் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் 3 மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள எல்லா தீர்மானங்களும் அங்கீகரிக்கப்பட்டதாக கருதலாமா என்பதை தெளிவாக்கப்படவில்லை . இத்தனை குறைபாடுகளும் மக்களுக்கு உச்சநீதிமன்றத்தின்மீது உள்ள நமிக்கையை குறைப்பதாக உள்ளதால் மீண்டும் அரசியல் அமைப்பு சட்டக்குழுவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு சரியான தீர்ப்பு வழங்குவதே சரியானதாக இருக்கும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை