புரி ஜெகன்நாதர் கோவிலுக்கு அச்சுறுத்தலா? போலீசார் விசாரணை
புவனேஸ்வர்: பிரபல கோவிலான புரி ஜெகன்நாதர் கோவிலுக்கு அச்சுறுத்தலா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசாவில் மிகவும் பிரபலமான கோவில் புரி ஜெகன்நாதர் ஆலயமாகும். பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோவில் என்பதால், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவிலை சுற்றி, ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் அருகாமையில் ட்ரோன் ஒன்று பறந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதியில் சுமார் 1.30 மணிநேரம் ட்ரோன் பறக்க விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ப்ரித்விராஜ் ஹரிசந்திரன் கூறுகையில், 'கோவில் அருகே சட்டவிரோதமாக ட்ரோன் பறக்கவிடப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. பாதுகாப்பு விதிகளை மீறிய நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புரி எஸ்.பி. தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தை சுற்றி 4 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்ட 24 மணிநேரமும் கண்காணிப்பை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது', எனக் கூறினார்.