உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டது சட்டப்படி தவறு!

மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டது சட்டப்படி தவறு!

கவர்னர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், '10 மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டது சட்டப்படி தவறு' என, உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என்றும் கூறியுள்ளது. இதன் வாயிலாக, பல்கலைகளின் வேந்தர் அதிகாரம், இனி முதல்வர் வசம் செல்லும். சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட, 10 மசோதாக்கள் மீது, நீண்ட நாட்களாக முடிவெடுக்காமல் இருந்துவிட்டு, பிறகு அவற்றை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்த கவர்னர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

வாய்ப்பு இல்லை

இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வில் தொடர் விசாரணையாக நடைபெற்று வந்தது.விசாரணையின்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, அபிஷேக் மனு சிங்வி, வில்சன் உள்ளிட்டோர் வாதிட்டதாவது:கவர்னர்களுக்கு என, தனி அதிகாரங்கள் எதுவும் அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்படவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அமைச்சரவைக் குழுவின் ஆலோசனை மற்றும் அறிவுரைகளுக்கு உட்பட்டுதான், அவரால் செயல்பட முடியும்.ஆனால், கவர்னர்கள், தங்களையே ஒரு தனி அரசாக நினைத்து செயல்படுகின்றனர். மாநில அரசுகள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைப்பதன் வாயிலாக, மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுகின்றனர். தமிழக கவர்னர் ரவியும், அவ்வாறுதான் செயல்படுகிறார்.முதல்முறை மசோதாவை ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தபோதே, அதை, அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால், மசோதாவை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டார். அப்படி திருப்பி அனுப்பியபோது, அவர் சொன்ன விஷயங்களை சரி செய்து, அரசு மீண்டும் அவருக்கு அனுப்பினால், அதற்கு ஒப்புதல் வழங்குவதைத் தவிர வேறு எந்த வாய்ப்பும் இல்லை என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

ஏற்க முடியாது

ஆனாலும், வேண்டுமென்றே அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இது, சட்டப்படி ஏற்கத்தக்கது அல்ல.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.கவர்னர் தரப்பில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி வாதிட்டதாவது:கவர்னர்களுக்கு என்று தனி அதிகாரம் இல்லை என, தமிழக அரசு தரப்பில் சொல்வதை நிச்சயம் ஏற்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின், 200வது பிரிவின் கீழ் அவருக்கு என, தனி அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு மசோதாவை ஜனாதிபதிக்கு எப்போது அனுப்பி வைக்க வேண்டும் என்ற முடிவை கவர்னர் எடுக்க முடியும். இதற்கெல்லாம் அமைச்சரவையின் ஆலோசனையை கவர்னர் கேட்க வேண்டியது இல்லை.இவ்வாறு அவர் வாதிட்டார்.அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த பிப்ரவரி, 10ல், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு மிக விரிவான உத்தரவை வழங்கியது.உத்தரவில், நீதிபதிகள் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்பினர்:அரசியலமைப்பு சட்டத்தின், 200வது பிரிவு, கவர்னருக்கு வழங்கி உள்ள அதிகாரங்களில், எவ்வளவு துாரம் அவர் செயல்பட முடியும்; இந்த சட்டப்பிரிவின் கீழ் அவரால் தன்னிச்சையாக செயல்பட முடியுமா; அவரது அந்த செயல்பாடுகள் வரம்பிற்கு உட்பட்டதா அல்லது உட்படாததா?மேலும் ஒரு சட்டசபை, மசோதாவை நிறைவேற்றி முதன்முதலாக கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும்போது, அதை ஜனாதிபதிக்கு அனுப்பாமல் மீண்டும் சட்டசபைக்கு அனுப்பி வைக்கிறார். அதே மசோதாக்களை மீண்டும் கவர்னருக்கு, சட்டசபை அனுப்பி வைக்கும்போது, அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறதா? அப்படி, 10 மசோதாக்களை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்; அது சட்டப்பூர்வமானது தானா?அரசியலமைப்பு சட்டத்தின், 200வது பிரிவின் கீழ் கவர்னர், தன் அதிகாரத்தை பயன்படுத்த கால வரம்பு நிர்ணயிக்க முடியுமா? இந்த பிரிவின் முதல் ஷரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, 'கூடிய விரைவில்' என்ற வார்த்தையை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அமைச்சரவைக் குழுவின் அறிவுரை மற்றும் ஆலோசனையின்படி மட்டுமே செயல்பட வேண்டுமா அல்லது கவர்னருக்கு என, தனிப்பட்ட அதிகாரங்கள் இருக்கிறதா? அவ்வாறு தனிப்பட்ட அதிகாரங்கள் இருக்கிறது என்றால், அதில் நீதித்துறை எந்த அளவிற்கு தலையிட முடியும்?இவ்வாறு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தங்கள் உத்தரவில் இவற்றுக்கான பதிலை அளித்தனர். உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:ஒரு மாநிலத்தின் கவர்னருக்கு அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 200ன் கீழ், மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. முதலாவது, மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவது; இரண்டாவது, மசோதாவை நிறுத்தி வைப்பது; மூன்றாவது, அதை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்புவது. இதன்படி பார்த்தால், அரசியலமைப்பு சட்டத்தின், 200வது பிரிவின்படி, கவர்னர் முழுமையாக தன்னிச்சையாக செயல்பட அதிகாரம் பெற்றவர் கிடையாது. ஒரு மசோதாவை நிறுத்தி வைப்பேன் என்று கவர்னர் முடிவெடுத்தால், ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள, 'கூடிய விரைவில்' என்ற விதிமுறையின் கீழ், அவர் வந்து விடுகிறார்; எனவே அதன் அடிப்படையில் தான், அவர் செயல்பட்டாக வேண்டும்.இதில் கவர்னருக்கு, 'வீட்டோ பவர்' என்ற தனி அதிகாரம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அரசியலமைப்பு சட்டத்தின், 200வது பிரிவு என்ன சொல்லி இருக்கிறதோ, அதன்படியே, கவர்னர் ஒரு மசோதாவின் மீது செயல்பட முடியும். அதை விடுத்து மசோதாவின் மீது அவர் வெறுமனே உட்கார்ந்து கொண்டு, எந்த முடிவும் எடுக்காமல் இருக்க அனுமதி கிடையாது.மேலும், கவர்னர்கள் அதிகாரம் தொடர்பான பொது விதிப்படி, ஒரு மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டு, அரசு அதை கவர்னருக்கே மீண்டும் ஒப்புதலுக்காக அனுப்பும் பட்சத்தில், அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க, கவர்னருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.அதாவது, மசோதா மீதான இரண்டாவது சுற்றில், கவர்னர் அந்த மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப முடியாது; அதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். ஒரே ஒரு தளர்வு என்னவென்றால், இரண்டாவது முறையாக மாநில அரசு அனுப்பும் மசோதா, முதல் முறை அனுப்பிய மசோதாவில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால் மட்டும்தான், அதை ஜனாதிபதிக்கு அனுப்புவது தொடர்பாக கவர்னரால் பரிசீலனை செய்ய முடியும்.அதன்படி பார்க்கும்போது, தமிழக அரசு இரண்டாவது முறையாக அனுப்பிய, 10 மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னர் அனுப்பி வைத்தது சட்டவிரோதம் மற்றும் அது உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டியது. இந்த விஷயத்தில் தமிழக கவர்னர் நேர்மையாக செயல்படவில்லை. எனவே, தமிழக அரசு இரண்டாவது முறையாக அனுப்பிய, 10 மசோதாக்களும், அது அனுப்பப்பட்ட நாளில் ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்படும். இந்த விஷயத்தில் கவர்னர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. அத்துடன், இந்த மசோதாக்கள் மீது, ஜனாதிபதி எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும், அதுவும் செல்லாததாகி விடும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த முக்கிய வழக்கில், வாத பிரதி வாதங்களை முன்வைத்த, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், இந்த தீர்ப்பை எழுத தங்களுக்கு உறுதுணையாக இருந்த தங்களது அலுவலகப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

கவர்னர்களுக்கு காலக்கெடு!

மசோதாக்கள் மீது கவர்னர்கள் நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை, உச்ச நீதிமன்ற அமர்வு நிர்ணயித்துள்ளது. உத்தரவில் அமர்வு கூறியுள்ளதாவது:அரசியலமைப்பு சட்டப்பிரிவு, 200ன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள, 'கூடிய விரைவில்' என்ற ஷரத்தின்படி, மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.1சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவை நிறுத்தி வைக்கவோ அல்லது ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பவோ முடிவு செய்தால், ஒரு மாதத்துக்குள் அதை அறிவிக்க வேண்டும்.2அவ்வாறு நிறுத்தி வைக்க முடிவு செய்யும் மசோதாவை, அதற்கான காரணங்கள் மற்றும் தேவையான திருத்தங்களை தெரிவித்து, சட்டசபைக்கு மூன்று மாதங்களுக்குள் திருப்பி அனுப்ப வேண்டும்.3ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்ப முடிவு செய்தால், மூன்று மாதங்களுக்குள் அனுப்ப வேண்டும்.4இரண்டாவது முறையாக வரும் மசோதா மீது, ஒரு மாதத்துக்குள் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.மாநில அரசின் அமைச்சரவைக் குழுவின் அறிவுரையின்படி செயல்பட கடமைப்பட்டவர் தான் கவர்னர். தனிப்பட்ட அதிகாரங்கள் ஏதேனும் அவருக்கு கொடுக்கப்பட்டு இருந்தாலும், அரசியலமைப்பு சட்டத்தை செயல்படுத்தும்போது, அவரது மற்ற அதிகாரங்கள் ஒன்றும் இல்லாமல் ஆகிவிடும். அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளை காப்பாற்ற கவர்னர் இவ்வாறு தான் செயல்பட வேண்டும்.எனவே, தமிழக சட்டசபை அனுப்பி வைத்த, 10 மசோதாக்கள் மீது கவர்னர் எடுத்த நடவடிக்கை விதிமீறல் என்பதுடன், பிழையானதும் கூட. இதை இப்படி வெளிப்படையாக தெரிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. மேலும், ஒரு கவர்னர் விழிப்புடன் இருக்க வேண்டுமே தவிர, தடையை ஏற்படுத்துபவராக இருக்கக்கூடாது.சட்டமேதை அம்பேத்கரின் மிக முக்கிய வாக்கியமான, 'ஒரு அரசியலமைப்பு சட்டம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால், அது, மோசமானதாகவே இருக்கும்' என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். இவ்வாறு உத்தரவில் அமர்வு கூறியுள்ளது. - புதுடில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 125 )

baala
ஏப் 16, 2025 10:36

உண்மையான பெயரில் எழுத தைரியம் இல்லையா.


Raghavan
ஏப் 14, 2025 22:15

நீதிபதிகள் மற்றவர்கள் முதுகில் உள்ள அழுக்கை தான் பார்க்கின்றார்கள் தங்கள் முதுகில் உள்ள அழுக்கை பார்ப்பது இல்லை . வாய்தாவுக்கு மேல் வாய்தா கொடுத்து ஒரு வழக்கை இழு இழு என்று குறைந்தது 20 வருடங்களுக்கு மேலாக இழுத்து வருகிறார்கள். இவர்களுக்கு கால கெடு ஒன்றும் இல்லை போல ? சிவில் கேஸாக இருந்தால் 5 வருடங்களுக்குள்ளும் கிரிமினல் கேஸாக இருந்தால் 8 வருடங்களுக்குள்ளும் முடிக்கவேண்டும் என்று ஒரு கட்டுப்பாடுகொண்டுவாருங்களேன்.


baala
ஏப் 14, 2025 10:48

எந்த நல்லது செய்தாலும் எதிர்ப்புதான் அதுதான் இந்தியா


Nagarajan S
ஏப் 13, 2025 18:40

இந்தியாவின் அனைத்து நீதி மன்றங்களிலும் பல லக்ஷகணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் வழக்குகளை தீர்க்க அதெற்கெல்லாம் எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்காத உச்ச நீதிமன்றம், ஜனாதிபதிக்கும், கவர்னர்களுக்கும் காலக்கெடு நிர்ணயித்திருப்பது கொடுமையிலும் கொடுமை.


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 11, 2025 00:48

தனது அடாவடி தற்குறித்தனமான செய்கையால் ரவி எல்லா கவர்னர்களுக்கும் ஆப்பு வைத்து ஒருவகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு நன்மை விளைவித்து விட்டார். Pocket Veto வை ஒழிப்பதற்கு காரணமாக இருந்து அதற்கு நீதிமன்றம் வழிமுறையை நிர்ணயிக்க காரணமாக இருந்துள்ளார்.


Narayanan
ஏப் 10, 2025 14:10

நீதிமன்றங்களில் பலவழக்குகள் பல ஆண்டுகளாக வாய்தா எண்ணிக்கையில் இருக்கிறது. ஆளுநர் கிடப்பில் போட்டார் என்று குற்றம் சொல்லும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை 3 மாதங்களில் முடிக்க உத்திரவாதம் தருமா? நீதியின் தராசு முள் சரியாக செயல்பட நீதிபதிகள் செயல்படவேண்டும் .


Murugesan
ஏப் 09, 2025 23:55

லட்சக்கணக்கான மனுக்களை ஏன் இன்னும் நிலுவையிலுள்ளது, நீதிபதிகளே,


Keshavan.J
ஏப் 09, 2025 22:40

யூனிவேர்சிட்டி வேந்தர் ஸ்டாலின். என்ன கொடுமை சரவணா இது. அங்கியை மாட்டி கொண்டு சிரிப்பு வேந்தர் போல் இருப்பர். சின்ன தத்தியும் இது போல் காமெடியா இருக்கும்.


baala
ஏப் 16, 2025 10:36

அதுவா முக்கியம் செயல்தான் முக்கியம்


சண்முகம்
ஏப் 09, 2025 20:20

செய்தியை விட, சட்டம் அறியாத பிரகஸ்பதிகளின் கருத்துப்பதிவுகள் சுவாரஸ்யமாக இருக்கிறது.


Muthukumar Ganesan
ஏப் 09, 2025 18:47

மிகவும் தவறான ஒரு முன்னுதாரணம். மூளை மழுங்கிய திராவிட கொத்தடிமைகள் வேண்டுமென்றால் இதனால் சுய இன்பம் அனுபவிக்கலாம். மத்திய அரசு இப்படி எந்த விதமான நடவடிக்கையும் எஉட்க்காமல் பேடித்தனமாக இருப்பது ஏன் என புரியவில்லை. ஆளுனருக்கு முடிவெடுக்க நாட்கள் நிர்ணயம் செய்யத்தெரிந்த இந்த சோறம் போனவர்களுக்கு ஏன் நீதிபதிகளுக்கு வழக்குகளை முடிக்க நாட்கள் நிர்ணயம் செய்ய கூடாது. அதைவிட கொடுமை என்ன எனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு முடிவு எடுத்தால் ஆளுனர் கட்டுப்படவேண்டும் என்றால் அந்த அரசு போய் அடுத்த அரசு வந்து வேறு ஒரு முடிவு எடுத்தால் எதனை சட்டமாக்குவர். ஆளுனர் எவ்வாறு அரசுக்கு கட்டுப்பட்டவர் ஆவார்? இவர்கள் அனேகமாக இது போன்ற தவறான வேந்தர்கள் இருக்கும் பல்கலை கழகத்தில் படித்தவர்களா தெரியவில்லை. எது எப்படி இருப்பினும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனரை இப்படி அவமானப்படுத்த அனுமதிக்கும் மத்திய அரசு பேடியே. இதை விட இந்த கும்பல் மீது இருக்கும் ஒரு வழக்கை கூட தண்டனை கொடுக்காமல் பாதுகாத்து வருவதை பார்த்தால் மத்திய அரசின் பெரும் தலைகளுக்கு இவர்களின் கொள்ளையில் பங்கு போகிறதோ என தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை


P. SRINIVASAN
ஏப் 10, 2025 11:19

இந்த தீர்ப்பு உங்களை போன்ற கொத்தடிமைகளுக்கு சாட்டை. நீதி வென்றது ...


ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 11, 2025 00:39

ரெம்ப பொங்குறியே. உன்னுடைய கடைசி கேள்விக்கு பதில் "ஆமாம்".. கோடிக்கணக்கில் கமிஷன் போகிறது. கவர்னர் ஒரு கமிஷன் ஏஜெண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை