உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடினமான வளர்ச்சி பணியை கைவிடுவது காங்., பழக்கம்: பிரதமர் மோடி

கடினமான வளர்ச்சி பணியை கைவிடுவது காங்., பழக்கம்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இடா நகர்: ''கடினமான மற்றும் சவாலான வளர்ச்சி பணிகளை கைவிடுவது, காங்கிரசின் உள்ளார்ந்த பழக்கம். அக்கட்சியின் இந்த பழக்கத்தால் அருணாச்சல பிரதேசம் உட்பட ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியமும் கடும் பாதிப்பை சந்தித்தது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். வடகிழக்கு மாநிலமான அருணாச்சலில், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இடா நகர் மாவட்டத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடி, ஷியோமி மாவட்டத்தில் யார்ஜெப் ஆற்றின் மீது இரண்டு பெரிய நீர்மின் திட்டங்கள் உட்பட, 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்தார். இதையடுத்து, வர்த்தகர்கள், வரி செலுத்துவோர் மற்றும் தொழில் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அவர், ஜி.எஸ்.டி., குறைப்பால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து, இடா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

மிகவும் கடினமான மற்றும் சவாலான வளர்ச்சிப் பணிகளை அப்படியே விட்டு விடுவது, காங்கிரசின் உள்ளார்ந்த பழக்கம். அக்கட்சியின் இந்த பழக்கத்தால், அருணாச்சல பிரதேசம் உட்பட ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியமும் கடும் விளைவுகளை சந்தித்தது. வளர்ச்சி பணிகள் சவாலாக இருந்த மலைப்பாங்கான மற்றும் வனப்பகுதிகளை, பின்தங்கிய இடங்களாக அறிவித்து அவற்றை காங்., புறக்கணித்தது. ஒரு காலத்தில் சாலைகள் அமைப்பது சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட பகுதிகளில் தற்போது நவீன நெடுஞ்சாலைகள் உள்ளன. சேலா சுரங்கப்பாதை, அருணாச்சலின் பெருமைமிக்க அடையாளமாக உள்ளது. ஹோலோங்கி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து டில்லிக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன. 2014ல் பிரதமராக முதன்முதலில் நான் பதவியேற்ற போது, நாட்டை காங்கிரசின் மனநிலையிலிருந்து விடுவிக்க தீர்மானித்தேன். அக்கட்சியை போல ஓட்டுகள் அல்லது தொகுதிகள் அடிப்படையில், மாநிலங்களில் வளர்ச்சி பணிகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை. தேச முன்னுரிமை என்ற கொள்கைப்படி, அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறோம். வடகிழக்கு மாநிலங்களை டில்லியில் இருந்து மேம்படுத்த முடியாது என்பது எனக்கு தெரியும். அதனால் தான், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அடிக்கடி இந்த மாநிலங்களுக்கு அனுப்புகிறேன். தனிப்பட்ட முறையில், நானே 70 முறைக்கு மேல் வந்துள்ளேன். நாட்டின் எல்லையில் உள்ள கிராமங்களை காங்., அரசு புறக்கணித்ததால், அங்கு வசித்த மக்கள் இடம்பெயர்ந்தனர். பா.ஜ., அரசின் 'துடிப்பான கிராமம்' என்ற திட்டத்தால், அருணாச்சலில் உள்ள 450க்கும் மேற்பட்ட எல்லை கிராமங்கள் தற்போது சாலைகள், மின்சாரம், இன்டர்நெட் மற்றும் சுற்றுலா வசதிகளை பெற்றுள்ளன. அவை சுற்றுலாவின் புதிய மையங்களாக மாறி வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார். திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு அருணாச்சல் பயணத்தை முடித்து, மற்றொரு வடகிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, கோமதி மாவட்டத்தின் உதய்பூர் என்ற இடத்தில் உள்ள 524 ஆண்டுகள் பழமையான, புனரமைக்கப்பட்ட திரிபுர சுந்தரி கோவிலை திறந்து வைத்தார். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து அவர் வழிபட்டார். நாடு முழுதும் உள்ள 51 ஹிந்து சக்திபீட கோவில்களில், திரிபுர சுந்தரி கோவிலும் ஒன்று. ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். திரிபுராவின் முக்கிய சுற்றுலா தலமாகவும் விளங்கும் இக்கோவில், 52 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Indian
செப் 23, 2025 08:53

இன்னும் காங்கிரஸ் ஐ குறை சொல்லி கொண்டிருப்பது எவ்வளவு பெரிய பலகீனம் . இதுல வேற இந்தியா வளர்ந்த நாடாக்க போறாங்களாம் ..


kumaran
செப் 23, 2025 08:31

சீனா மற்றும் இந்தியா 1950 களில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வளர்ச்சியில் தான் இருந்தது ஆனால் இன்று சீனா அசுர வளர்ச்சி பெற்று வல்லரசாகவும் வலிமையான பொருளாதார நாடாகவும் மாறியது ஆனால் இங்கு கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் ஆட்சியை தக்க வைப்பதிலும் தங்கள் பொருளாதாரங்களை வளர்ப்பதிலே குறியாக இருந்ததால் இந்தியா மிகவும் பலவீனமாக இருந்தது என்பதை மறக்க முடியாது


Priyan Vadanad
செப் 23, 2025 05:45

அத்தனை வருடங்களுக்கு முன்னால் பணப்புழக்கம் எப்படி இருந்தது என்பது கூடவா தெரியாது? இன்னும் காங்கிரஸையே குறை சொல்லிக்கொண்டு இருக்கலாமா? நமது பிரதமர் கட்சி, அரசியல் உணர்வுக்கு மேற்பட்டவராக இருக்க விரும்புகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை