ஜப்பான் நாட்டிற்கு முதல் முறையாக பெண் பிரதமர்
டோக்கியோ: ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில், ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததை அடுத்து, பிரதமர் ஷிகெரு இஷிபா தன் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். அதன் பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி, 64, தேர்ந் தெ டுக்கப்பட்டார். இதையடுத்து, ஜப்பானின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டு பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடை பெற்றது. இதில், 465 ஓட்டுகளில் 237 பேரின் ஆதரவை பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து ஜப்பான் அரசரை சந்தித்த பின் விரைவில் அவர், நாட்டின் பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இதன் மூலம் ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும் சனே டகாய்ச்சி பெறுகிறார். புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள டகாய்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.