உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக ஜாதி கலவர வழக்கில் 98 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம்

கர்நாடக ஜாதி கலவர வழக்கில் 98 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம்

கொப்பால் : கர்நாடகாவில் தலித் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட 98 குற்றவாளிகளுக்கு, ஒரே நேரத்தில் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவின் கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவில், மருகும்பி என்ற கிராமம் உள்ளது. இங்கு வசிக்கும் தலித் சமுதாய மக்கள் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வந்தனர்.இந்த கிராமத்தில் உள்ள முடி திருத்தும் நிலையங்கள், ஹோட்டல்களுக்குள் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், தலித் மக்களுக்கும், பிற சமூகத்தினருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.கடந்த 2014, ஆக., 28ம் தேதி, தலித் இளைஞர்கள் சிலர் அந்த கிராமத்தில் உள்ள திரையரங்கில் சினிமா பார்க்கச் சென்றனர். அப்போது, பிற சமூகத்தைச் சேர்ந்த சிலர் தலித் இளைஞர்களை தாக்கினர். இதனால், அங்கு மோதல் வெடித்தது.இதை தொடர்ந்து, மருகும்பி கிராமத்தில் உள்ள தலித் மக்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அப்பகுதியில் மிகப் பெரிய ஜாதிக் கலவரம் வெடித்தது. கிராமத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், அங்கு மூன்று மாதங்களுக்கு முகாம் அமைத்து பாதுகாப்பு அளித்தனர்.இந்த கலவரத்தில், 117 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணை முடிவடைந்து, நேற்று முன்தினம் தீர்ப்பளிக்கப்பட்டது.குற்றஞ்சாட்டப்பட்ட 117 பேரில், 16 பேர் உயிரிழந்துவிட்டனர்; மீதியுள்ள 101 பேரில், 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தைச் சேர்ந்த மூன்று குற்றவாளிகளுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பத்து ஆண்டுகள் காத்திருப்புக்கு நீதி கிடைத்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ