ஈ.டி., அதிகாரி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய கேரள தொழிலதிபர்
புதுடில்லி: அமலாக்கத் துறை அதிகாரி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை, விசாரணையின் போது கேரள தொழிலதிபர் வழங்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.கேரளாவின் கொட்டாரக்கராவைச் சேர்ந்த தொழிலதிபர் அனீஷ் என்பவர், ஆப்ரிக்க நாடுகளில் இருந்து குறைந்த விலையில் முந்திரி இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டுஉள்ளார். கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பியதில் முறைகேடு நடந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, எர்ணாகுளத்தில் உள்ள ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் சேகர் குமார் விசாரித்தார். அப்போது, அனீஷ் மீதும், அவரது பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்வதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, சேகர் குமாரின் தரகர் எனக் கூறி, வில்சன் என்பவர் அனீஷை தொடர்பு கொண்டு, வழக்கு விசாரணையை முடிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார். தொடர்ந்து, அமலாக்கத் துறையின் சம்மன் நகல்களை அனீஷுக்கு அனுப்பிய வில்சன், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து, கேரள ஊழல் தடுப்பு பிரிவில் தொழிலதிபர் அனீஷ் அளித்த புகாரின்படி, வில்சன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளதால், அமலாக்கத் துறை அதிகாரி சேகர் குமார் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை தனியாக விசாரணைக்கு எடுத்த டில்லி அமலாக்கத் துறை தலைமையகம், அனீஷுக்கு சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது.இதன்படி, டில்லி அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி அனீஷ் ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை, அமலாக்கத் துறையினர் வீடியோபதிவு செய்தனர். விசாரணையின் போது, அமலாக்கத் துறை உதவி இயக்குநர் சேகர் குமார் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, எந்த ஆதாரத்தையும் அனீஷ் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. அமலாக்கத் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி சேகர் குமாருக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பது தனக்கு தெரியாது என, தொழிலதிபர் அனீஷ் தெரிவித்துள்ளார். ஆதாரங்களின்றி அமலாக்கத் துறை அதிகாரி மீது குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளது' என்றார்.