உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கி கடன் தள்ளுபடி விவகாரத்தில் கேரள ஐகோர்ட்.. அதிருப்தி!: வயநாடு மக்கள் ஏமாற்றப்பட்டதாக ஆவேசம்

வங்கி கடன் தள்ளுபடி விவகாரத்தில் கேரள ஐகோர்ட்.. அதிருப்தி!: வயநாடு மக்கள் ஏமாற்றப்பட்டதாக ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்யும் விவகாரத்தில், மத்திய அரசு மீது கேரள உயர் நீதிமன்றம் கடுமையான அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளது. 'கேரள மக்களை மத்திய அரசு ஏமாற்றி விட்டது; எங்களுக்கு அனுதாபம் தேவையில்லை' என, கண்டித்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த 2024, ஜூலை 30ம் தேதி வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். எண்ணற்ற வீடுகள் மண்ணில் புதைந்தன. உற்றார், உறவினர்களை இழந்து குழந்தைகள் நிராதரவாக தவித்தனர். இயற்கையின் இந்த கோர தாண்டவத்தால், ஒட்டுமொத்த வயநாட்டு மக்களின் வாழ்க்கையும் தலைகீழாக மாறியது. இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து வங்கி கடன் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. தெளிவின்மை முந்தைய விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், வங்கி கடன்களை தள்ளுபடி செய்யும் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் தெளிவின்மை நீடிக்கிறது என கூறியிருந்தார். இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரமாண பத்திரத்தை அவர் தாக்கல் செய்தார். அதில், 'கடன்களை தள்ளுபடி செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை' என, கூறப்பட்டிருந்தது. அதிகாரம் இல்லையா? வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதற்கு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும், ரிசர்வ் வங்கி தான் அதற்கான வழிகாட்டுதல்களை வகுத்து இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் ஜோபின் செபாஸ்டியன் கடும் அதிருப்தி அடைந்தனர். இதை தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை மத்திய அரசை கட்டுப்படுத்துகிறதா? அப்படியெனில் மத்திய அரசால் ரிசர்வ் வங்கிக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாதா? வங்கி கடன்களை தள்ளுபடி செய்வதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என கூறிவிட முடியாது. கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு மனம் இல்லையா? என்ற கேள்வி தான் எழுகிறது. எனவே, அதிகாரம் இல்லை என காரணம் கூறி, அதன் பின்னால் ஒளிந்து கொள்வதை நிறுத்துங்கள். மக்களை முட்டாள்களாக்க முயற்சிக்காதீர்கள். உதவிக்கரம் மத்திய அரசிடம் பணம் இருக்கிறதா? இல்லையா? என்பதை நாட்டு மக்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். மத்திய அரசிடம் போதிய நிதி இல்லையென்றால், எந்தவொரு மாநிலத்திற்கும் உதவிக்கரம் நீட்ட முடியாது. இன்றைய நாளிதழ்கள் எங்கே? அதில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத், அசாம் போன்ற மாநிலங்களுக்கு 707.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அரசின் உயர் மட்ட கமிட்டி ஒப்புதல் அளித்திருக்கும் செய்தி இடம் பெற்றிருக்கிறது. அனுதாபம் வேண்டாம் இத்தனைக்கும், வயநாட்டில் நிகழ்ந்தது போன்ற மோசமான நிலச்சரிவும், வெள்ளமும் அங்கு ஏற்படவில்லை. அப்படியிருந்தும் மத்திய அரசால் 707 கோடி ரூபாயை திரட்டி தர முடிகிறது. ஹரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வளர்ச்சி திட்டப் பணிகளை விரிவாக்கம் செய்வதற்கும் மத்திய கமிட்டி 903.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது. உண்மையிலேயே மத்திய அரசுக்கு துணிவு இருந்தால், வயநாடு மக்களுக்கு உதவ முடியாது என நேரடியாக கூற வேண்டியது தானே. இயற்கை பேரிடர் போன்ற மோசமான சூழலில், உதவாமல் கைவிரித்து விட்டது என்ற உண்மையாவது மக்களுக்கு தெரியட்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு இந்த நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்காது. ஏனெனில் அரசியலமைப்பை மதிக்கும் ஒரு அங்கமாக இந்த நீதிமன்றம் இருக்கிறது. போதும், எங்களுக்கு உங்கள் அனுதாபம் தேவையில்லை. அதே சமயம், மத்திய அரசு போல வெறுமனே கையை கட்டிக் கொண்டு இந்த நீதிமன்றம் சும்மா இருக்காது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இடைக்கால தடை!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பட்டியலை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில வங்கிகள் கடன்களை தள்ளுபடி செய்ய முன்வந்திருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா போன்ற சில குறிப்பிட்ட வங்கிகள், கடன்களை சில காலம் வரை வசூலிப்பதற்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ