உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொட்டம்: அமெரிக்க அதிகாரியிடம் ராஜ்நாத் கவலை

காலிஸ்தான் பயங்கரவாதிகள் கொட்டம்: அமெரிக்க அதிகாரியிடம் ராஜ்நாத் கவலை

புதுடில்லி : அமெரிக்காவில், இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக, அமெரிக்காவின் தேசிய உளவுத் துறை இயக்குநர் துளசி கப்பார்ட்டிடம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு, இணைந்து செயல்படுவது தொடர்பாக, மத்திய அரசு நடத்திய உளவு தலைவர்கள் கூட்டத்தில், அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளின் பிரதி நிதிகள் பங்கேற்றனர்.டில்லியில் இந்தக் கூட்டம், நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், அமெரிக்காவின் தேசிய உளவுத் துறை இயக்குநர், துளசி கப்பார்ட், கனடாவின் உளவுப் பிரிவு தலைவர் டேனியல் ரோஜர்ஸ், பிரிட்டனின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜொனாத்தன் பாவெல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல நட்பு நாடுகளின் உளவுப் பிரிவுத் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.இருப்பினும் இந்தக் கூட்டத்தில், பெருகி வரும் பயங்கரவாதம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுபோல, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகள், அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.கனடா உட்பட பல நாடுகளில், இந்தியாவுக்கு எதிரான அமைப்புகள் இயங்கி வருவது தொடர்பாக, மத்திய அரசு தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, துளசி கப்பார்ட் மற்றும் அஜித் தோவல் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் துளசி கப்பார்ட் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, சமீபகாலமாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நடவடிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து, கப்பார்ட்டிடம், ராஜ்நாத் சிங், தன் கவலையை பகிர்ந்து கொண்டார்.

பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதி!

இரண்டு நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்க தேசிய உளவுத் துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கூறியதாவது: இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு என்பது நீண்ட வரலாற்றை உடையது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக எதிர்க்கிறார். அவர்கள் உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். உலகெங்கும் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கும் நோக்கத்துடன், இந்த பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இதனால், உலகெங்கும் உள்ள மற்ற மதத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், ஹவுதி உட்பட அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் ஒடுக்குவது, ஒழிப்பது தான், டிரம்ப் அரசின் முயற்சியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை