தலித் மாநாட்டுக்கு கார்கே ஒப்புதல்? சிவகுமாரின் நிலைப்பாடு என்ன!
துணை முதல்வர் சிவகுமாரால் தடை விதிக்கப்பட்ட தலித் மாநாட்டுக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தலித் சமூகத்தை சேர்ந்த பரமேஸ்வர், கடந்தாண்டு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தலித் எம்.எல்.ஏ.,க்களை வைத்து மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தார்.இம்மாநாட்டுக்கு தடை விதிக்குமாறு, துணை முதல்வர் சிவகுமார், கட்சி மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தினார். இதை தொடர்ந்து, மாநாடு ஆலோசனை கூட்டத்திற்கு முந்தைய நாள், கூட்டம் நடத்த, கட்சி தலைமை தடை விதித்தது. இதனால், கூட்டம் நடத்தப்படவில்லை.சமீபத்தில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூரு வந்திருந்தார். அப்போது உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், அவருடன், 40 நிமிடங்கள் பேசினார். முடிவில் நிருபர்கள் கேட்டதற்கு, 'நாங்கள் அரசியல் குறித்து பேசவில்லை' என பரமேஸ்வர் தெரிவித்தார்.ஆனால், மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து தேர்தல்கள் விரைவில் நடக்கவிருப்பதால், தலித் மாநாடு நடத்த வேண்டும் என்று பரமேஸ்வர் நெருக்கடி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.ஒரு வழியாக சில தலைவர்களுடன் கலந்துரையாடிய கார்கே, தலித் மாநாட்டுக்கு, 'ஓகே' சொன்னதாக தெரிகிறது. மாநாட்டுக்கு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு அழைப்பு விடுக்கவும், மாநாட்டுப் பணிகளை, கட்சியினருடன் இணைந்து மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.இதற்கு ஏற்றாற்போல், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, 'நேரம் வரும் போது, பரமேஸ்வர் தலைமையில் தலித் மாநாடு நடத்தப்படும். மாநாடு தொடர்பாக, அவரிடமே கேளுங்கள்' என நழுவிக் கொண்டார்.முதல்வர் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சிவகுமாருக்கு, அப்பதவி கிடைக்கக் கூடாது என்பதில் தலித் தலைவர்கள் உறுதியாக உள்ளனர். இதற்காகவே தலித் மாநாடு, தலித் முதல்வர் என்ற ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.இதனால், சிவகுமார் அதிருப்தி அடைந்துள்ளார். தன் ஆதரவாளர்களை துாண்டி விட்டு, மாநாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. - நமது நிருபர் -