பெங்களூரில் வாகன நெருக்கடியை குறைக்க நிதின் கட்கரியுடன் குமாரசாமி ஆலோசனை
பெங்களூரில் வாகன நெருக்கடியை குறைக்கும் நோக்கில், தனியார் ஒருங்கிணைப்பில் துணை நகர வட்டசாலை திட்டம், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது. வேண்டுகோள்
மத்திய நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்கரியை, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, டில்லியில் பார்லிமென்ட் பவன் அலுவலகத்தில், நேற்று சந்தித்தார்.அப்போது, பெங்களூரு நகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண, துணை நகர வட்ட சாலை திட்டம் குறித்து, இருவரும் ஆலோசனை நடத்தினர். அரசு மற்றும் தனியார் ஒருங்கிணைப்பில், திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கும்படி, குமாரசாமி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நிதின் கட்கரி, விரைவில் மத்திய அமைச்சரவை முன், இவ்விஷயத்தை கொண்டு சென்று, ஒப்புதல் பெற்று தருவதாக உறுதி அளித்தார்.பின், குமாரசாமி அளித்த பேட்டி:பெங்களூரின் முக்கியமான திட்டத்துக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சாதகமான பதில் அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. துணை நகர வட்ட சாலை திட்டம், 2013லேயே வகுக்கப்பட்டது. பல காரணங்களால் கிடப்பில் போடப்பட்டிருந்தது.பெங்களூரின் சுற்றுப்பகுதிகளில் உள்ள, தொழிற் பகுதிகளுக்கு இணைப்பு ஏற்படுத்தும் திட்டம் இதுவாகும். ஓசூர் இணைப்பு
திட்டத்தை செயல்படுத்த முன்னாள் பிரதமர் தேவகவுடா, அதிகம் முயற்சித்தார். அவர் எழுதியிருந்த கடிதம், கட்கரியிடம் வழங்கப்பட்டது.நான்கு முதல் ஆறு வழிபாதைகள் கொண்ட திட்டம், தாபஸ்பேட், தொட்டபல்லாபூர், சூலிபெலெ, ஹொஸ்கோட், ஆனேக்கல், கனகபுரா, ராம்நகர், மாகடி, பெங்களூரு மற்றும் சுற்றுப்பகுதிகளை இணைக்கும். பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைக்கும் தொடர்பு ஏற்படுத்தும். தமிழகத்தின் ஓசூரையும் இணைக்கும்.தொழிற்சாலைகளுக்கு சரக்கு சப்ளை செய்யும், எந்த விதமான கனரக வாகனங்களும், பெங்களூரு நகருக்குள் நுழையாமல் தடுப்பதே, திட்டத்தின் நோக்கமாகும். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.திட்டம் செயல்படுத்தப்பட்டால், பெங்களூரு நகர், பெங்களூரு ரூரல் மாவட்டங்களுக்கு அதிக உதவியாக இருக்கும். குறிப்பாக பெங்களூரு நகரின் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். 135 கி.மீ., துார திட்டத்துக்கு 4,750 கோடி ரூபாய் செலவிடப்படும்.போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதுடன், தொழிற்வளர்ச்சிக்கும் உதவும் திட்டமாகும். மாநில வளர்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -