உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வன்கொடுமை சட்டம் துஷ்பிரயோகம் வக்கீலுக்கு ஆயுள் தண்டனை

வன்கொடுமை சட்டம் துஷ்பிரயோகம் வக்கீலுக்கு ஆயுள் தண்டனை

லக்னோ: தலித் பெண் வாயிலாக பாலியல் பலாத்காரம், வன்கொடுமை வழக்கு உட்பட 29 பொய் வழக்குகளை, தன் எதிரி மீது தாக்கல் செய்த வழக்கறிஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் பரமானந்த குப்தா. சொத்து பிரச்னையில், தன் எதிரியான அரவிந்த் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான வழக்குகளை தொடர்ந்திருந்தார். மேலும், பூஜா ராவத் என்ற தலித் பெண் வாயிலாக, 18 பாலியல் வழக்குகளையும் தாக்கல் செய்தார். இந்த வழக்குகளில் ஒன்றின் விசாரணை, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மார்ச் 5ல் நடந்த போது, போலீஸ் அறிக்கைகளை ஆய்வு செய்த நீதிபதிக்கு, 'ஜோடிக்கப்பட்ட வழக்காக இருக்கலாம்' என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தை சி.பி.ஐ., வசம், உயர் நீதிமன்றம் ஒப்படைத்தது. விசாரணையில், அரவிந்த் குடும்பத்தினரை பழி வாங்க, தன் மனைவி சங்கீதா நடத்தும் அழகு நிலையத்தில் பணியாற்றிய பூஜா ராவத் என்ற தலித் பெண்ணை வழக்கறிஞர் பரமானந்த குப்தா பயன்படுத்தியது அம்பலமானது. அரவிந்த் குடும்பத்தினருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு பூஜா இருந்தது, பரமானந்த குப்தாவுக்கு வசதியாக அமைந்தது. இதனால், அரவிந்த் குடும்பத்தினர் மீது மொத்தம் 29 பொய் வழக்குகளை தாக்கல் செய்திருக்கிறார். பூஜாவை சி.பி.ஐ., விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, எஸ்.சி., - -எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய் வழக்குகளை தாக்கல் செய்த பரமானந்த குப்தா மீது, லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் கடந்த 4ல் ஆஜரான பூஜா, 'பரமானந்த குப்தா, அவரது மனைவி சங்கீதாவின் மிரட்டலுக்கு பயந்து போலி புகார்களை கொடுத்தேன். அவர்களின் நிர்ப்பந்தத்தால், அரவிந்த் குடும்பத்தினர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தேன்; என்னை மன்னித்து விடுங்கள்' என கூறினார். இதையடுத்து, தனக்கு பிடிக்காதவர்கள் மீது அடுக்கடுக்காக பொய் வழக்குகளை போட்ட வழக்கறிஞர் பரமானந்த குப்தாவுக்கு ஆயுள் தண்டனையும், 5.10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர் வக்கீல் தொழில் செய்யவும் தடை விதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 21, 2025 13:39

விஷயம் தெரிந்தவர்கள் சட்டத்தை வைத்து எதிரிகளை துவம்சம் செய்ய முடியும் என்றால்


Subramanian
ஆக 21, 2025 07:18

First time hearing a great judgement. If more such judgements come in all courts,


Padmasridharan
ஆக 21, 2025 06:30

வரவேற்கத்தக்கது சாமி. இனி சட்டம்தான் இந்த மாதிரி வக்கீல்களையும் காவலர்களையும் அடக்கி ஆளவேண்டும். இதில் வக்கீல்கள் மட்டுமல்ல, காவலர்களும் இவ்வாறு சாமானிய மக்களை பயமுறுத்தி பஞ்சாயத்து என்கிற பெயரில் பணம்/பொருள் அதிகார பிச்சையெடுக்கின்றனர். பல குற்றங்கள் மறைக்கப்படுகின்றன, நேர்மையானவர்களின் உண்மையான தைரியத்தை அழிக்கின்றனர்.


Raj
ஆக 21, 2025 05:42

இது போல ஒரு நீதிபதி வீட்டில் 100 கோடி ரூபாய் இந்திய பணம் எரிந்து கிடந்தது அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, இப்பொழுதும் நீதிபதியாகவே இருக்கிறார். இப்பொழுதும் விசாரணை தான்....... இது வக்கீல் ஆயுள் தண்டனை இதுவே நீதிபதியாக இருந்தால் நோ case. கேவலம்.


Modisha
ஆக 21, 2025 05:03

அட்டவணை பிரிவினர் ஒருவருக்கும் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவருக்கும் தகராறு என்றால் திடீர் என்று இந்த ஆயுதம் பயன்படுத்த படும் . மற்ற நியாயங்கள் மறைந்து இது மட்டுமே பெரிதாக்கப்படும்.


KR india
ஆக 21, 2025 04:48

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த காலத்தில் இருந்து தீண்டாமை கொடுமை இருந்தது உண்மை தான். நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அதாவது 2000-ஆம் ஆண்டு வரை, இந்த வன்கொடுமை சட்டத்தை, வைத்திருந்ததும் கூட ஏற்கத்தக்கதே. ஆனால், தற்போதும் இந்த சட்டம் தேவையா ? இந்த வழக்கு மட்டுமல்லாமல், பல வழக்குகளில், தீண்டாமை வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகளில் காண்கிறோம். ஒரே நாடு, அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அடிப்படை இயற்கை நீதிக்கு முரணாக இருக்கும், இது போன்ற பழைய சட்டங்களை, மத்திய அரசு துணிந்து நீக்க வேண்டும். குப்பன் பாதிக்கப்பட்டாலும், சுப்பன் பாதிக்கப்பட்டாலும் அனைவருக்கும் ஒரே நீதி வேண்டும். நாம் அனைவரும் இந்நாட்டின் பிள்ளைகள் தானே ? அவ்வாறிருக்க, ஒரு சமூகத்தை சேர்ந்தவர் பாதிக்கப்பட்டால், குறைவான தண்டனை, மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர் பாதிக்கப்பட்டால், அதிகபட்ச தண்டனை என்று சட்டமும், நீதியும், மக்களிடையே நீதி பரிபாலனத்தில், பாகுபாடு பார்க்கலாமா ? நீதி தேவதையின் தராசு, அனைத்து தரப்பினருக்கும் நடுநிலையாக இருக்க வேண்டாமா ? ஒன்று, தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை நீக்குங்கள் அல்லது அனைத்து சாதி, மதத்தினருக்கும் இந்த வன்கொடுமை சட்டத்தை விரிவு படுத்தி சட்டம் இயற்றுங்கள் அதுதானே நியாயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை