உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20ல் மதுபான கடைகள் மூடல்; உரிமையாளர்கள் போராட்டம்

20ல் மதுபான கடைகள் மூடல்; உரிமையாளர்கள் போராட்டம்

பெங்களூரு ; கலால் துறையினரை கண்டித்து, மது விற்பனையாளர்கள் வரும் 20ம் தேதி போராட்டம் நடத்த உள்ளனர். அன்றைய தினம் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும்.பெங்களூரில் மது கடைகளுக்கு உரிமம் வழங்குவதற்கு, பல கோடி ரூபாய் வசூல் செய்ததாக, கலால் துறை அமைச்சர் திம்மாபூரின் உதவியாளர் மீது, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், சில தினங்களுக்கு முன், மது விற்பனையாளர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.கலால் துறை அமைச்சர், 1,000 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதன் மூலம், 300 கோடி முதல் 700 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக புகார் தெரிவித்தனர். எதிர்க்கட்சி தலைவர் அசோக், அமைச்சரின் வார வருமானம் 18 கோடி ரூபாய் என குற்றம் சாட்டினார்.இந்நிலையில், சில்லறை மதுபான விற்பனையில் குறைந்தபட்சம் 20 சதவீத லாபம், உரிமம் பெறாத மதுபான விற்பனைக்கான அபராதம் அதிகரிப்பு; போலீசாரின் தலையீடுகள் உட்பட 11 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, பெங்களூரில் உள்ள சுதந்திர பூங்காவில், வரும் 20ம் தேதி, மது விற்பனையாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்துகின்றனர். அன்றைய தினம், மாநிலம் முழுதும் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும். மது விற்பனையாளர் சங்க கூட்டமைப்பு பொது செயலர் கோவிந்தராஜ் ஹெக்டே கூறுகையில், ''எங்கள் தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தெரியப்படுத்துவதற்கும், இழப்பீடுகளுக்கு உரிய தொகை அளிக்குமாறும், கலால் துறையில் நடக்கும் ஊழலை சரி செய்யவும் முதல்வர், கலால் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை