உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக் ஆயுக்தா விசாரணை முதல்வர் சித்தராமையா ஆஜர்

லோக் ஆயுக்தா விசாரணை முதல்வர் சித்தராமையா ஆஜர்

மைசூரு,:'முடா' வழக்கில், லோக் ஆயுக்தா விசாரணைக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று ஆஜரானார்.கர்நாடக காங்., அரசின் முதல்வர் முதல்வர் சித்தராமையா. இவர், மைசூரு நகர்ப்புற வளர்ச்சி ஆணையமான, 'முடா'வில் இருந்து, தன் மனைவி பார்வதிக்கு, 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டு மனைகளை வாங்கிக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, சித்தராமையா, பார்வதி, இவரது சகோதரர் மல்லிகார்ஜுன சாமி, நிலத்தின் உரிமையாளர் நாகராஜ் ஆகியோர் மீது, மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல்வரின் மனைவி, அவரது சகோதரர், நாகராஜ் ஆகியோர், ஏற்கனவே லோக் ஆயுக்தா விசாரணைக்கு ஆஜராகினர்.இந்நிலையில், நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி, முதல்வருக்கு லோக் ஆயுக்தா சம்மன் அனுப்பி இருந்தது. இதன்படி நேற்று காலை, மைசூரு லோக் ஆயுக்தா அலுவலகத்தில் சித்தராமையா ஆஜரானார். அவரிடம், 10:30 மணி முதல் 12:30 மணி வரை விசாரணை நடந்தது. லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ், முதல்வரிடம் விசாரணை நடத்தினார்.'முடா'வில் இருந்து மனைவிக்கு வீட்டுமனை வாங்கிக் கொடுத்தது, வீட்டுமனையை திரும்ப ஒப்படைத்தது உட்பட 40க்கும் மேற்பட்ட கேள்விகள் முதல்வரிடம் கேட்கப்பட்டுள்ளன. அவரும், பொறுமையாக பதில் அளித்துள்ளார். விசாரணை முடிந்து, மதியம் 12:35 மணிக்கு புறப்பட்டுச் சென்றார்.பின், மைசூரு விருந்தினர் மாளிகையில் சித்தராமையா அளித்த பேட்டி:லோக் ஆயுக்தா அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்துள்ளேன். மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று அவர்கள் கூறவில்லை. நான் அளித்த பதில்களை பதிவு செய்து கொண்டனர்.லோக் ஆயுக்தா விசாரணையை பா.ஜ., தலைவர்கள் கிண்டல் செய்கின்றனர். பா.ஜ., ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடு பற்றி அவர்கள் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டனரா? லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்கியது பா.ஜ.,தான். இப்போது அந்த அமைப்பின் மீது சந்தேகம் தெரிவிக்கின்றனர்.முடா வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் சி.பி.ஐ., அதிகாரிகள் மத்திய பா.ஜ., அரசின் பேச்சைக் கேட்டு செயல்படுகின்றனர். என் மனைவிக்கு முடாவில் இருந்து கிடைத்த, 14 வீட்டு மனைகளும் சட்ட ரீதியாக கிடைத்தவை. அதையும் நாங்கள் இப்போது திருப்பிக் கொடுத்து உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
நவ 07, 2024 05:55

பதவியை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் தவிர பதவியில் இருந்து ஒண்டு விசாரணைக்கு செல்வது சுத்த கோமாளித்தனம்.


புதிய வீடியோ