லூதியானா மேற்கு தொகுதி இன்று இடைத்தேர்தல்
லூதியானா:லூதியானா மேற்கு தொகுதியின் இன்று இடைத்தேர்தல் நடப்பதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை ஓட்டுப் பதிவு நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, 23ம் தேதி நடக்கிறது.லூதியான மேற்கு தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வாக இருந்த குர்பிரீத் பாஸி கோகி, ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. ஆம் ஆத்மி சார்பில் ராஜ்யசபா எம்.பி., சஞ்சீவ் அரோரா, காங்கிரஸில் பாரத் பூஷண் ஆஷூ, பா.ஜ.,வில் ஜீவன் குப்தா உட்பட, 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இந்த இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி ராஜ்யசபா உறுப்பினர் சஞ்சீவ் அரோராவை நிறுத்தியுள்ளது.மொத்தம் உள்ள 1,75,469 வாக்காளர்களில் 85,371 பேர் பெண்கள், 10 திருநங்கையர். மொத்தம் 194 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு உள்ளிட்ட, 12 வகையான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டி ஓட்டுப் போடலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்தத் தேர்தலில் ஆளும் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.