உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா செயல்பாட்டை ஜக்தீப் தன்கர்...சீர்குலைக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்

ராஜ்யசபா செயல்பாட்டை ஜக்தீப் தன்கர்...சீர்குலைக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே ஆவேசம்

'புதுடில்லி - 'ராஜ்யசபாவில் கடும் அமளி, கூச்சல் - குழப்பம் ஏற்படுவதற்கு, சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் தான் முக்கிய காரணம்,'' என, காங்., தேசிய தலைவரும், ராஜ்ய சபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே நேற்று குற்றஞ்சாட்டினார்.நவ., 25ல் துவங்கிய பார்லி., குளிர்கால கூட்டத்தொடர், வரும் 20 வரை நடக்கிறது. இதில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட 16 முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய, ஆளும் பா.ஜ., அரசு திட்டமிட்டுள்ளது. தொழிலதிபர் கவுதம் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை, பார்லி.,யின் இரு சபைகளிலும், காங்., - தி.மு.க., - சமாஜ்வாதி - திரிணமுல் காங்., அடங்கிய, 'இண்டி' கூட்டணி கட்சிகள் எழுப்பி வருகின்றன. இதனால், அலுவல்கள் நடக்காமல் லோக்சபா மற்றும் ராஜ்யசபா தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. ராஜ்யசபாவை பொறுத்தவரை, சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே பலமுறை மோதல் ஏற்பட்டது. 'ஒருதலைபட்சமாக ஜக்தீப் தன்கர் நடந்து கொள்கிறார்' என, இண்டி கூட்டணி கட்சியினர் துவக்கம் முதலே குற்றஞ்சாட்டி வருகின்றனர்.தன்கர் ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்வதாகவும், ராஜ்யசபா தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வலியுறுத்தியும், நம்பிக்கையில்லா தீர்மானத்தை இண்டி கூட்டணி கட்சியினர் கொண்டு வந்துள்ளனர்.

முதல்முறை

இதில், காங்., - திரிணமுல் காங்., - ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.,க்கள் கையெழுத்திட்டனர். ராஜ்யசபா வரலாற்றில், சபை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறை.இந்த விவகாரம் தொடர்பாக, டில்லியில் நேற்று, நிருபர்களிடம், காங்., தேசிய தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:கடந்த 1952 முதல் இதுவரை, அரசியலமைப்பின் 67-வது பிரிவின் கீழ், துணை ஜனாதிபதியை நீக்க எந்த தீர்மானமும் கொண்டு வரப்பட்டதில்லை. காரணம், துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் ஒருபோதும் அரசியல் செய்யவில்லை. விதிகளின்படி, ராஜ்யசபாவை நடத்தினர். ஆனால் இன்று, நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. சபை தலைவராக இருந்து கொண்டு, ஜக்தீப் தன்கர் அரசியல் செய்கிறார். அவரது நடத்தை நாட்டின் கண்ணியத்தை கெடுத்து விட்டது. பார்லி., வரலாற்றில், ராஜ்யசபா தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய சூழ்நிலையை ஜக்தீப் தன்கர் ஏற்படுத்தி விட்டார். அவருடன் எங்களுக்கு தனிப்பட்ட பகையோ, அரசியல் வெறுப்போ கிடையாது. நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.

அவமதிப்பு

ராஜ்யசபாவில், எதிர்க்கட்சி தலைவர்களை தன் எதிரிகளாக ஜக்தீப் தன்கர் பார்க்கிறார். மூத்தவராக இருந்தாலும் சரி, இளையவராக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சி தலைவர்களை ஆட்சேபனைக்குரிய கருத்துகளை கூறி அவர் அவமதிக்கிறார். பள்ளி தலைமை ஆசிரியரைப் போல, எம்.பி.,க்களுக்கு அவர் உபதேசம் செய்கிறார். நாட்டின் முக்கிய பிரச்னைகளில் எதிர்க்கட்சிகளை பேச விடாமல் ஜக்தீப் தன்கர் தடுக்கிறார். அரசியலமைப்பு மரபுகளுக்கு பதிலாக, ஆளுங்கட்சிக்கு மிகவும் விசுவாசமாக அவர் நடந்து கொள்கிறார். தன் அடுத்த பதவி உயர்வுக்காக, அரசின் செய்தித் தொடர்பாளராக அவர் பணியாற்றுகிறார். ராஜ்யசபாவில் அமளி, கூச்சல் - குழப்பம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமே, சபை தலைவர் ஜக்தீப் தன்கர் தான். இதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இந்த விவகாரத்தில் இண்டி கூட்டணி கட்சிகள் ஒன்றுபட்டு உறுதியாக உள்ளன. ஜக்தீப் தன்கரின் செயல்பாடுகளே நாங்கள் இந்த நடவடிக்கை எடுக்க காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, லோக்சபாவில் தனக்கும், சோனியாவுக்கும் எதிராக பா.ஜ., - எம்.பி.,க்கள் கூறிய கருத்துகளை சபைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரிய அவர், சபை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும்படி வலியுறுத்தினார்.

'ரோஸ்' கொடுத்த ராகுல்

அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து பார்லி.,யில் விவாதிக்கக் கோரி, பார்லி., வளாகத்தில் காங்., உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பார்லி.,க்கு வந்த பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங்கிற்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் 'ரோஸ்' வழங்கினார். மேலும், மூவர்ணக் கொடியையும் அவர் கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
டிச 12, 2024 10:09

ஏம்பா.. வெட்டப்பட்ட கை காங்கிரஸ் நண்பர்களே.. உங்களுக்கு ஒரு விவசாயி ஜஃடிப் சங்கரை பற்றி பேச அருகதை இருக்கிறதா? மாண்புமிகு துணை ராஷ்டிரபதி காங்கிரஸ் கட்சியினருக்கும் பேச அனுமதி கொடுக்கிறார் ஆனால் காங்கிரெஸ்க்காரனுக்கு மட்டும்தான் நேரம் வேண்டும் என கூக்குரல் இடுவது எப்படி நியாயம். அன்று உங்களின் அன்சாரி செய்த ஒத்து காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியவில்லையா அல்லது கண் பார்வை மறைத்ததா?? அன்சாரி செய்தது சரியென்றால் ஜகதி செய்வதும் சரிதான். இந்திய அக்கல் உங்களது அடாவடித்தனத்தாய் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்