உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாக்டர் கொலை விவகாரத்தில் மம்தாவுக்கு நெருக்கடி! திரிணமுல் எம்.பி., திடீர் ராஜினாமா

டாக்டர் கொலை விவகாரத்தில் மம்தாவுக்கு நெருக்கடி! திரிணமுல் எம்.பி., திடீர் ராஜினாமா

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை, ஆளும் திரிணமுல் காங்., அரசு கையாண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஜவ்ஹர் சிர்சார், தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த விஷயத்தில் சொந்த கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், முதல்வர் மம்தாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்த, 31 வயதான பயிற்சி பெண் டாக்டர், ஆக., 9ல், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்தில், போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கிறது.பயிற்சி பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க முழுதும் மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது, மம்தா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்ப்பு

இந்த வழக்கை முதல்வர் மம்தா பானர்ஜி கையாண்ட விதத்துக்கு, ஆளும் திரிணமுல் காங்கிரசுக்குள்ளே எதிர்ப்பு குரல் எழுந்தது.'திரிணமுல் காங்கிரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அனைத்துக்கும் நிர்வாகிகள் லஞ்சம் கேட்கின்றனர்' என, அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஜவ்ஹர் சிர்சார் பகிரங்கமாக சமீபத்தில் குற்றஞ்சாட்டினார்.இதை கண்டித்த திரிணமுல் காங்., மேலிடம், 'கட்சி கொள்கைகளில் உடன்படவில்லை என்றால், ஜவ்ஹர் சிர்சார் மரியாதையுடன் கட்சியில் இருந்து விலகலாம்' என, எச்சரித்தது.இந்நிலையில், கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை, மம்தா பானர்ஜி அரசு கையாண்ட விதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திரிணமுல் காங்., ராஜ்யசபா எம்.பி., ஜவ்ஹர் சிர்சார், தன் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.இது குறித்து, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவர் எழுதிய கடிதம்:திரிணமுல் காங்கிரசில் தலைவிரித்தாடும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினேன். இந்த கருத்துக்கு பின், மூத்த தலைவர்களிடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொண்டேன். என் இத்தனை ஆண்டு அனுபவத்தில், அரசுக்கு எதிராக இந்த அளவுக்கு எதிர்ப்பு மற்றும் நம்பிக்கையின்மையை பார்த்ததே இல்லை.ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்ட நான், ஒரு மாதம் பொறுமையாக இருந்தேன். போராட்டம் நடத்தும் பயிற்சி டாக்டர்களுடன், நீங்கள் நேரடியாக பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் நடக்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கை தாமதமானது.

அதிருப்தி

தற்போதைய சூழலில், எம்.பி.,யாக தொடர எனக்கு விருப்பமில்லை. விரைவில் டில்லி சென்று ராஜ்யசபா தலைவரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கி விட்டு, அரசியலில் இருந்து விலகுவேன்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.பயிற்சி டாக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தை மம்தா சரியாக கையாளவில்லை என, கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர்.இந்நிலையில், மூத்த எம்.பி., ஒருவர், இதற்காக தன் பதவியை ராஜினாமா செய்தது, மம்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையே, முதல்வர் மம்தாவிடம் அமைச்சரவை கூட்டத்தை கூட்டும்படியும், கோல்கட்டா போலீஸ் கமிஷனரை பதவி நீக்கம் செய்யும்படியும் கவர்னர் ஆனந்த போஸ், அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

'முதுகெலும்பு உள்ள தலைவர்?'

சிர்சார் ராஜினாமா குறித்து, பா.ஜ., - எம்.பி., ஷாமிக் பட்டாச்சார்யா கூறியதாவது: ஜவ்ஹர் சிர்சார், கட்சி தலைமைக்கு எதிராக பேசுவது புதிய விஷயமல்ல. இதற்கு முன்பும் சில முறை எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து, அதற்கு பின், முடிவை வாபஸ் பெற்றுள்ளார். இப்போதும் அப்படி ஏதாவது நாடகம் நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உண்மையிலேயே எம்.பி., பதவியை சிர்சார் ராஜினாமா செய்திருந்தால், திரிணமுல் கட்சியில் முதுகெலும்பு உள்ள ஒரு தலைவராவது இருக்கிறாரே என, மக்கள் பெருமைப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை