உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மம்தாவின் வேண்டுகோள் புறக்கணிப்பு; உண்ணாவிரதத்தை தொடரும் டாக்டர்கள்

மம்தாவின் வேண்டுகோள் புறக்கணிப்பு; உண்ணாவிரதத்தை தொடரும் டாக்டர்கள்

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் வேண்டுகோளை புறக்கணித்த ஜூனியர் டாக்டர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். மேற்கு வங்கம் கோல்கட்டாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர், கடந்த ஆக., 9ல் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், அவரது உடல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் பணியாற்றிய போலீஸ் நண்பர்கள் குழுவின் தன்னார்வலர் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். கல்லுாரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட மேலும் சிலர் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, பயிற்சி டாக்டர் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், மருத்துவமனையில் பாதுகாப்பை அதிகரித்தல், மாநில சுகாதாரச் செயலரை பணி நீக்கம் செய்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மேற்கு வங்கம் முழுதும் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வலியுறுத்தல்

பயிற்சி டாக்டர்கள் ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த 14 பேர், கோல்கட்டா எஸ்பிளனேடு பகுதியில் கடந்த 5ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுஉள்ளனர். இதில், ஆறு பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், எட்டு பேர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி டாக்டர்களை நேற்று முன்தினம் சந்தித்த தலைமைச் செயலர் மனோஜ் பண்ட், உள்துறை செயலர் நந்தினி சக்ரவர்த்தி ஆகியோர் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர். முதல்வர் மம்தா பானர்ஜியும் பயிற்சி டாக்டர்களிடம் தொலைபேசி வாயிலாக பேச்சு நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

எனக்கு எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அது சுகாதார சேவைகளை பாதிக்கக் கூடாது. மாநில சுகாதாரத் துறை செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாமை நீக்க வேண்டும் என்பது உங்கள் கோரிக்கை.

நடவடிக்கை

ஒரு துறையில் உள்ள அனைவரையும் ஒரே நேரத்தில் நீக்க முடியாது. ஒரு அதிகாரி நீக்கப்படுவதை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம்? இது தர்க்க ரீதியானதா?நாங்கள் போலீஸ் கமிஷனர், மருத்துவக் கல்வி இயக்குனர், சுகாதார சேவைகள் இயக்குனர் ஆகியோரை ஏற்கனவே நீக்கியுள்ளோம். ஆனால், அந்தத் துறையில் உள்ள அனைவரையும் என்னால் நீக்க முடியாது.உங்கள் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை அரசு நிறைவேற்றும். சிலவற்றுக்கு கொள்கை முடிவுகள் தேவை. நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்போம். ஆனால், என்ன செய்ய வேண்டும் என்பதை, அரசுக்கு நீங்கள் ஆணையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. மக்கள், சிகிச்சைக்காக உங்களை நம்பி இருக்கின்றனர். ஏழைகள் எங்கே போவர்? தயவுசெய்து என் பதவியை மறந்து என்னை உங்கள் சகோதரியாக நடத்துங்கள். மருத்துவ மாணவி கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., உங்களுக்கு நீதி வழங்கும் என நம்புகிறேன். மாணவர் தேர்தலை நடத்த, மூன்று முதல் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுங்கள். அதற்குள் உங்களின் பெரும்பாலான பிரச்னைக்கு தீர்வு காண்கிறேன்.மாநிலத்தில் சுகாதாரப் பணியாளர்களின் பணியிடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து இயல்புநிலையை மீட்டெடுக்க முன்வாருங்கள்; அரசியலுக்கு அப்பாற்பட்டு, உங்களை சார்ந்திருக்கும் மக்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள்; போராட்டத்தை கைவிடுங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே, தலைமைச் செயலரின் அறிவுறுத்தலின்படி, முதல்வருடன் இன்று மாலை 5:00 மணிக்கு பேச்சு நடத்த ஒப்புதல் அளித்துள்ள பயிற்சி டாக்டர்கள், கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Barakat Ali
அக் 21, 2024 10:56

பிரச்னை தீவிரமாகிறது.. உலகளவில் தகவல் பரவிவிட்டது... வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களின் கைவரிசை என்று கூட பேசப்படுகிறது... எப்படி இருப்பினும் இதனால் இந்தியாவுக்கு மிகவும் அவமானம் ..... சட்டுபுட்டு ன்னு முடிக்கிற வழியைப் பாருங்க ......


raja
அக் 21, 2024 07:39

மக்கா, மாமதையின் மயக்கும் வார்த்தைகளை நம்பி விடாதீர்கள்...மோசம் போயிடுவீங்க...மாமதையின் அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை அசராதீர்கள்...


சம்பர
அக் 21, 2024 06:28

நல்ல உயர் 48 நாள்னு ஒரு பழமொழி உண்டு பாப்போம்


Kasimani Baskaran
அக் 21, 2024 05:16

மம்தாவுக்கு கொடச்சல் மேல் கொடச்சல்... இந்திக்கூட்டணியில் இருந்திருந்தால் இந்த சோகம் வந்திருக்காது.


Balasubramanyam Rajendran
அக் 21, 2024 04:13

வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவ நிபுணர்கள் ஒன்று புரிந்துகொள்ள வேண்டும். வேலைநிறுத்தம் செய்வது தங்கள் கோரிக்கையை மக்களிடம் கொண்டு செல்வது மட்டுமே. பேச்சுவார்த்தையின் பொது அரசு எதை நிறைவேற்றுவேன் என்று சொல்கிறதோ அதை செயல் படுத்திவிட்டு மற்றவற்றை நிவேற்ற அடுத்த தேர்தல் வரை காத்திருப்பதுதான் நன்று. குழந்தை மாதிரி ஆடம் பிடிப்பது பங்களா தேசம் மாணவர்கள் மாதிரியும் ஸ்ரீலங்காவின் ப்ரோபாகரன் மாதிரியும் ஆகும். இந்த மோதலில் மாட்டிக்கொள்வது அப்பாவி மக்கள் மட்டுமே. இன்னொரு பாதை முதன் மந்திரி பதவி விலகுவது. ஹசினா அதை செய்திருக்க வேண்டும். மம்தா அதை யோசிக்க வேண்டும். செயல் படுத்த தயங்க கூடாது.


முக்கிய வீடியோ