உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டல் ரூ.45 லட்சம் சுருட்டிய நபர் கைது

 டிஜிட்டல் அரெஸ்ட் என மிரட்டல் ரூ.45 லட்சம் சுருட்டிய நபர் கைது

​பாலக்காடு: 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில், பெண்ணிடம் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மும்பையை சேர்ந்த முக்கிய நபரை, போலீசார் கைது செய்தனர். ​கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த ஐ.டி., ஊழியரான பெண்ணிடம், 2023ம் ஆண்டு, மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறி,மர்ம நபர்கள் தொடர்பு கொண்டனர். அப்பெண்ணை, டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக நம்ப வைத்து, அவரது வங்கி கணக்கு விபரங்களைப் பெற்று, 45 லட்சம் ரூபாயை மோசடி செய்தனர். அப்பெண் கொடுத்த புகாரின்படி, பாலக்காடு சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் நிபுண்சங்கர் தலைமையில் போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டவர், மும்பையை சேர்ந்த சுனில்குமார் துபே, 29, என்பது தெரியவந்தது. அவரது டிஜிட்டல் தடயங்களை வைத்து கண்காணித்ததில், அவர் மஹாராஷ்டிராவில் பதுங்கியிருந்தது உறுதி செய்யப்பட்டது. போலீசார் அங்கு செல்வதற்குள், சுனில்குமார் துபே உத்தரபிரதேச மாநிலத்துக்கு தப்பிச் சென்றார். உத்தரபிரதேசத்தில் கியான்பூர் கிராமத்தில் பதுங்கியிருந்தவரை கைது செய்ய, பாலக்காடு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டனர். குற்றவாளியை போலீசார் பிடிப்பதற்குள், கிராம மக்கள் திரண்டு போலீஸ் வாகனத்தை தடுத்து தாக்குதல் நடத்த முயன்றனர். பல சவால்களுக்கு இடையே, 100 கி.மீ., குறுக்கு வழிகளில் பயணித்து, வாரணாசி விமான நிலையம் வழியாக குற்றவாளியை போலீசார் கேரளாவுக்கு அழைத்து வந்தனர். போலீசார் கூறுகையில், 'சுனில்குமார் துபே மீது, நாட்டின் 14 மாநிலங்களில், 40-க்கும் மேற்பட்ட பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை