விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் மினி ஒலிம்பிக்ஸ்
கர்நாடக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை ஒருங்கிணைப்பில், கர்நாடக ஒலிம்பிக்ஸ் அசோசியேஷன், பெங்களூரின் கன்டீரவா விளையாட்டு அரங்கில், 'மினி ஒலிம்பிக்ஸ்' போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. போட்டிகள் நேற்று துவங்கின.கே.ஓ.ஏ., எனும் கர்நாடகா ஒலிம்பிக்ஸ் அசோசியேஷன் தலைவரும், முதல்வரின் அரசியல் செயலருமான கோவிந்தராஜ் நேற்று அளித்த பேட்டி:மாநில விளையாட்டு துறை ஒருங்கிணைப்பில், நவம்பர் 14 முதல் 20 வரை மினி ஒலிம்பிக்ஸ் போட்டிகளை, கே.ஓ.ஏ., நடத்துகிறது. பெங்களூரின் கன்டீரவா விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடக்கின்றன. முதன் முறையாக 2020ல் மினி ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்தன. நாட்டிலேயே மினி ஒலிம்பிக்ஸ் நடத்தும் முதல் மாநிலம் கர்நாடகா.நம் மாநிலத்தில் உள்ள, விளையாட்டு திறமைசாலிகளை அடையாளம் கண்டு, அவர்களை மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு தயார்படுத்துவது, விளையாட்டு துறையின் நோக்கமாகும்.மாநிலத்தை சேர்ந்த மிக அதிகமான விளையாட்டு வீரர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும். இதற்காகவே மினி ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.மினி ஒலிம்பிக்ஸ் போட்டிகளில், கர்நாடகாவின் 14 வயதுக்கு உட்பட்ட, 4,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெவ்வேறு பிரிவுகளில், 24 விதமான விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளன. கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும்; இளைஞர்கள் விளையாட்டில் பங்கேற்கும்படி செய்ய வேண்டும். இவர்கள் ஏசியன் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸ், ஒலிம்பிக்சில் பங்கேற்க வேண்டும். போட்டிகள் நடத்த மாநில அரசு 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. விளையாட்டு துறையும், அனைத்து உதவிகளையும் செய்துள்ளது. வெற்றிகரமாக போட்டிகள் நடத்தப்படும்.சிறப்பாக விளையாடி முதல் இடம் பெறும் 15 விளையாட்டு வீரர்களுக்கு, கன்டீரவா விளையாட்டு அரங்கத்தில் உள்ள, விளையாட்டு அறிவியல் மையம் சார்பில், தலா 5,000 ரூபாய் பரிசளிக்கப்படும். திறமையாக விளையாடும் 200 விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். -- நமது நிருபர் --